சுட்ட தங்கம்- ஜனநேசன்

By காமதேனு

‘சென்னை சர்வதேச விமான நிலையம் வரவேற்கிறது’ என்ற தகவல் பலகை கண் சிமிட்டி ஒளிர்ந்தது. துபாயிலிருந்து வந்த விமானத்தில் இறங்கியவர்கள் தம் பொருட்கள் வந்து இறங்கும் பகுதி நோக்கி நகர்ந்தனர். இவன் இடது தோளில் கைப்பையையும் வலப்பக்கம் இரண்டு வயது மகளையும் தூக்கி இருந்தான். இவனது மனைவி வலக்கையில் கைப்பையையும், இடது கையில் ஒருவயது மகனையும் தூக்கி நெஞ்சில் அணைத்திருந்தாள். நெரிசல் குறைந்ததும் பொருள் எடுக்கும் பகுதிக்கு நகர்ந்தனர். இவர்கள் நெருங்கவும் பொருட்கள் வரவும் இவன் குழந்தையை இறக்கிவிட்டு பொதியை எடுத்து இழுத்துக்கொண்டே மகளை மீண்டும் தூக்கிக்கொண்டு நகர்ந்தான்.

விமான நிலையம் பகலில் ஒளிரும் இரவாக வெளிச்சத்தில் ஜொலித்தது. தின்பண்டங்களும் மதுபான அங்காடிகளும் சுங்கத்தீர்வை விலக்கங்காடிகள் எனப் பச்சை நிறத்தில் கண் சிமிட்டின. வெளியேறும் இடத்துப் பரிசோதனைக்காக நீண்ட வரிசை நின்றது. சோதனை மேடை வந்தது. இவர்களது பொருட்கள் பொதி கதிர்வீச்சு சோதனையில் ஏதுமில்லை என்றது. நிம்மதியாக சுவாசித்தனர். ஆனால், தங்க நகைகள் சோதித்து எடை போடப்பட்டன. வளையல்கள் நான்கு மட்டும் 80 கிராம்கள் இருந்தன. இவள் அணிந்திருந்த தாலிச்சங்கிலியைக் கழற்றச் சொன்னார்கள். இவர்கள் மறுத்தார்கள். இவர்களை சுங்க அலுவலரிடம் அழைத்துச் சென்றனர். அங்கே இவர்களுக்கு முன்னால் பத்துப் பேர் காத்திருந்தனர்.தாலியக் கழற்றி எடைபோடச் சொல்லுறாங்களே இவங்க இந்தியன்களா என்று கொதித்துக்கொண்டிருந்தனர்.

சுங்க அலுவலர் தன் முன்னுள்ள காமிரா திரையில் பார்த்தார். அதிர்ச்சியாக இருந்தது. இவன் எங்கே இங்கு வந்துள்ளான்? உறுதிப்படுத்திக்கொள்ள தனது மேஜையில் வைக்கப்பட்ட கடவுச் சீட்டுகளைத் தேடி இவர்களது ஆவணங்களைச் சரி பார்த்தார். இவனேதான் அவன். தனது வாழ்வை சிதைத்தவனைப் பழி தீர்க்க காலம் தனது காலடியிலேயே இவனைக் கொண்டு சேர்த்துவிட்டது. கடந்த நொடிவரை இயல்பாக சிரித்த முகத்தோடு பணியாற்றியவள் மின்னலாய் தாக்குண்டவள் போல் முகம் கறுத்து உடல் தளர்ந்தாள். அவளால் நிலைகொண்டு உட்கார்ந்திருக்க முடியவில்லை. இவர்களுக்கு முந்தைய இருவருக்கும் சுங்கத் தீர்வை விவரம் குறித்து வசூலிக்க உதவியாளரிடம் உத்தரவிட்டு எழுந்து ஓய்வறைக்கு விரைந்தாள். அந்தக் கணப் போதில் இவன், அவளைப் பார்த்துவிட்டான். இவனுக்கு இடியும் மின்னலும் தலையில் இறங்கியதுபோல் தலை மீது கை வைத்தபடி முனங்கினான். அவள் எப்படி இங்கு வந்தாள்? நிச்சயதார்த்தத்தை ரத்து செய்து திருமணத்தை நிறுத்தினேனே. ஒரு குடிகாரி மனைவியாக வருவதை எந்த இந்திய இளைஞன் ஏற்றுக்கொள்வான்? இதே சூழலில் அவள் ஆணாக இருந்து, நான் குடிகாரப் பெண்ணாக இருந்திருந்தால் நான் செய்ததுதானே அவளும் செய்திருப்பாள்? அடக் கடவுளே, மனைவி முன்னால் அவமானப்படுத்தப் போகிறாளே, நான் என்ன செய்வேன்? நம்மைக் காக்கவைத்து பழி வாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடுதானே அவள் எழுந்து உள்ளே சென்று விட்டாள் என்று மனதுக்குள்ளே குமைந்தான்.நெளிந்தான். தன் மனைவி தங்கைக்கென்று கூடுதலாக 20 கிராம் தங்கத்தைக் கொண்டு வராதிருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. இங்கே என்னடான்னா தாலிச்சங்கிலியையும் கணக்கில் கொண்டு வருகிறாளே, அப்படி என்றால் 40 கிராமுக்கு சுங்கத் தீர்வைக் கட்ட வேண்டுமா? சுங்கத் தீர்வைக் கட்டுவதற்குப் பதிலாக இந்தியாவிலேயே தங்கம் வாங்கி இருக்கலாமே? இப்படி அவஸ்தைப்பட்டு ஒரு குடிகாரி முன் தலை குனிந்து நிற்கணுமா? நிம்மதி இல்லாமல் பெருமூச்சு விட்டான்.

ஒரு டிசம்பர் ஞாயிறன்று அவளுக்கும் இவனுக்கும் நிச்சயதார்த்தம் மதுரையில் அவள் வீட்டில் நடந்தது. கல்யாணம் ஜனவரி இருபதில் கோவையில் இவன் வீட்டில் வைத்துக்கொள்வதென்று உறுதி செய்யப்பட்டது. இவன் சென்னையிலும், அவள் பெங்களூரிலும் ஒரே நிறுவனத்தில் மென்பொறியர்களாகப் பணியாற்றினார்கள். தனது திருமணம் உறுதி செய்யப்பட்டமைக்கு அவளுடன் பணியாற்றும் சக நண்பர்கள் விரும்பியதால் அடுத்த வார சனியன்று ஒரு விருந்து கொடுத்தாள். அதில் விரும்பிய நண்பர்களுக்கு பீர் விருந்து தரப்பட்டது.அந்நேரம் சென்னையிலிருந்து இவன் அவளுக்குக் கைப்பேசியில் தொடர்பு கொண்டிருக்கிறான். தொடர்பு கிட்டவில்லை. மறுநாள் ஞாயிறன்று இவன் மீண்டும் தொடர்புகொண்டபோது எதிர்கால இணையர்கள் பல விஷயங்களை அளவளாவியபடி முந்தய நாள் அவள் நண்பர்களுக்கு விருந்து கொடுத்தது பற்றிச் சொன்னாள்.விருந்தில் விரும்பியவர்கள் பீர் குடித்தார்கள் என்றும் சொன்னாள். அடுத்த நொடி இவன் தொடர்பைத் துண்டித்துவிட்டான். அவள் பதறி, பதைபதைத்து மீண்டும் மீண்டும் தொடர்புகொண்டாள். இவனது கைப்பேசி இணைப்பு துண்டிக்கப்பட்டே இருந்தது. அவள் சென்னை கிளை நண்பர்கள் மூலம் இவனைத் தொடர்புகொள்ள முயன்றாள். அன்று மாலை நான்கு மணி அளவில் அவளை உடனே மதுரைக்குக் கிளம்பி வருமாறு அப்பா கட்டளை. அவள் விளங்காமல் வெள்ளந்தியாகவே போய்ச் சேர்ந்தாள். வீடு அசாதாரண அமைதியில் இருந்தது. யாரும் அந்த அதிகாலையில் முகம் கொடுத்துப் பேசவில்லை. அவள் பயணக் களைப்பில் உறங்கிவிட்டாள். காலை பத்துமணி வாக்கில் அவள் வீட்டில் இவனது பெற்றோரும், உறவினரும் உணர்ச்சிகரமாகப் பேசுவதும், அவளது அம்மாவின் அழுகுரலும் கேட்டது. அவள் எழுந்து முகம் கழுவி கதவோரம் எட்டிப் பார்த்தாள். பேச்செல்லாம் அவளது திருமணம் ரத்து செய்வது குறித்து அழுகையும் ஆவேசமாக இருந்தது. அவள் ஓரளவு ஊகித்துக்கொண்டு அவளே போய் என்ன விவரம் என்று கேட்டாள். அவளது முடியைப் பிடித்து இழுத்துப்போய் அவளைக் காண்பித்து “நல்லா பாருங்கண்ணே, இவள் முகம் பார்த்து சொல்லுங்கண்ணே, இவளா குடிக்கிறவ... இப்படிச் சொல்றவங்க நாக்கு அழுகிப்போகும். நாங்க ஒண்ணும் எங்க பிள்ளையை அப்படி வளர்க்கல’’ என்று சொல்லி தலையில் அடித்துக்கொண்டு அழுதாள் அம்மா. மாப்பிளையின் அப்பா “என்ன நடந்தது என்று நீயே சொல்லும்மா” என்றார். அவளது அப்பாவும் என்ன நடந்தது என்று சொல்லச் சொன்னார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE