ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே உறுப்புகளை தானம் செய்தவரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
மயிலாடும்பாறை அருகே தங்கம்மாள்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட பச்சையப்பாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அழகுமுத்து (43). செங்கல் சூளை வைத்து நடத்தி வந்தார்.
கடந்த 28-ம் தேதி டூவீலரில் சென்ற போது பக்கவாட்டு ஸ்டாண்டை எடுக்காததால் வாய்க்கால்பாறை திருப்பத்தில் நிலைதடுமாறி விழுந்தார்.
பலத்த தலைக்காயம் அடைந்த அழகுமுத்து மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து 30-ம் தேதி அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
» வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்தவர் கைது @ பொள்ளாச்சி
» புதுச்சேரி குடியிருப்பு பகுதிகளில் நடமாடும் ‘போலி மதுபான’ ஆலை கண்டுபிடிப்பு
இதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் அழகுமுத்துவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்தனர். அதன்படி அவரின் இதயம், கண்கள், நுரையீரல், கணையம், கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன.
பின்பு இவரது உடல் பச்சையப்பாபுரம் கிராமத்துக்கு கொண்டு வரப்பட்டது. பெரியகுளம் கோட்டாட்சியர் முத்துமாதவன் மலர்வளையம் வைத்து அரசு மரியாதை செலுத்தினார். ஆண்டிபட்டி மண்டல துணை வட்டாட்சியர் கண்ணன், மயிலாடும்பாறை வருவாய் ஆய்வாளர் மாரிமுத்து. கிராம நிர்வாக அலுவலர் சியாம்சுந்தர், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இறந்த அழகுமுத்துவுக்கு முத்துமாரி (40) என்ற மனைவியும் அபிநயா (14) என்ற மகளும் அபினேஷ் (11) என்ற மகனும் உள்ளனர்.