கவிப்பித்தன்
kavipithan71@gmail.com
அறையின் கிழக்குச் சுவற்றில் எரிந்து கொண்டிருந்த இளஞ்சிவப்பு நிற இரவு விளக்கையே பார்த்தபடி பிளாஸ்டிக் பாயில் ஒருக்களித்துப் படுத்திருந்தாள் ரூபா. நேற்று வரை அவளின் அம்மா சரோஜா ஓயாமல் எடுத்த ரத்த வாந்தியின் நிறத்தை உறிஞ்சிக் குடித்த அந்த மின்விளக்கு… அவளில்லாத போது அறை முழுதும் அதைத் துப்பிக் கொண்டிருந்தது.
ரூபாவுக்கு முதுகைக் காட்டியபடி படுத்திருந்த அவளது கணவன் கோபியும், அவர்களின் ஆறு வயது மகள் பிரவீனாவும் உடல் முழுவதும் அந்தச் சிவப்பை பூசிக்கொண்டு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். ஆனால் ரூபாவால் இமைகளை மூடக்கூட முடியவில்லை. அருகிலிருக்கும் சிறிய முன்கூடத்தில் இதே போன்றதொரு பாயில் அவளது பெரிய தங்கை காவியாவும், அவளது கணவன் சீனாவும், அவர்களின் இரண்டு வயது மகனும் படுத்திருக்கிறார்கள். அவர்களும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கலாம். அவர்களிடமிருந்து தள்ளி ஒரு கோரைப்பாயில் அவளின் கடைசித் தங்கை சொப்னா படுத்திருக்கிறாள். அவள்தான் அவர்களின் இப்போதைய தீராத தலைவலி.
சொப்னாவுக்கு இப்போது பதினேழு வயது. பிறந்தபோது மற்றக் குழந்தைகளைப் போலத்தான் கடைவாயில் எச்சில் வழிய… அவர்களின் கண்களைப் பார்த்துப் பார்த்துச் சிரித்தாள். ஐந்து வயதைக் கடந்த பிறகும் அதே போல எந்நேரமும் எச்சில் வழிய வழிய “ங்கா ங்கா’’ என்று சிரித்துக்கொண்டே இருந்தாள். மரத்தைச் சுற்றிக்கொண்டு படரும் கொடியைப் போல கைகளை முறுக்கிக்கொண்டு நின்றாள். கால் பாதங்களும் எதிரெதிராய் விலகிக்கொண்டன. எட்டு வயதைக் கடந்தபிறகு உடற்குறைகளோடு அவளுக்கு மன வளர்ச்சியும் இல்லை என மருத்துவர்கள் சொன்னபோது மஞ்சுநாத சுவாமியிடம் முறையிடுவதைத் தவிர அவள் அம்மா சரோஜாவால் வேறொன்றும் செய்ய முடியவில்லை. அவள் அப்பா முத்து தினமும் வழக்கத்தை விட அதிகமாகக் குடித்துவிட்டு வந்து வேதனை தாங்காமல் குடிப்பதாகச் சொல்லிக் கொண்டார். அவருக்கு மேஸ்திரி வேலை. அவரைப் போல ஆதியில் வட தமிழகத்திலிருந்து பெங்களூருக்குப் பிழைக்க வந்த எல்லோருமே சித்தாள், மேஸ்திரி என்றுதான் பிழைப்பைத் தொடங்கினார்கள். அவரோடு வந்த பலர் இப்போது சொந்தமாய் மாடி வீடு கட்டி வசதியாய்தான் வாழ்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு கடைசிவரை வாடகை வீடுதான் வாய்த்தது.
சரோஜா அதிகாலையில் கிளம்பினால் ஏழு வீடுகளில் வீட்டு வேலை செய்துவிட்டு உச்சிப் பொழுதில்தான் திரும்புவாள். அந்த வீடுகளில் இரவு மீந்த உணவுகள், பாதி அழுகிய பழங்கள் என அவள் கொண்டுவருவதுதான் அவர்களுக்கான மதிய உணவு. அதிலும் மீந்தது இரவுக்கு. இரவு மட்டும் பம்ப் ஸ்டவ்வில் உலை வைத்து கூப்பன் அரிசி பொங்கி படுக்கிறபோது அதில் தண்ணீர் ஊற்றி வைப்பாள். அதுதான் அவர்களுக்குக் காலை சிற்றுண்டி பேருண்டி எல்லாமே. அந்த வீடுகளில் தருகிற பழைய துணிகள்தான் அவர்களுக்கான கனவு உடைகள். “செப்புச் செலமாதிரி மூணு மகாலட்சுமிங்கள குட்த்தியே…. அதுல ஒன்ன மட்டும் இப்டி மூளியா பட்ச்சிட்டியே…. கடவுளே?” என்று இரவும் பகலும் உருகினாள் அவள். ரூபாவும் காவ்யாவும் அரசுப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை தமிழும் கன்னடமும் படித்துவிட்டு கார்மென்ட்ஸ் வேலைக்குப் போனார்கள். ரூபாவைப் பெண் பார்க்க வந்த மூன்று வரன்கள் சொப்னாவின் நிலையைப் பார்த்துவிட்டு பதிலே சொல்லாமல் போய்விட்டனர்.
குருவி சேர்ப்பது போல நூறும் இருநூறுமாய் சிறுகச் சிறுகச் சேர்த்து… சீட்டு கட்டி… அதில் எப்படியாவது திருமணத்தை முடித்துவிட நினைத்த சரோஜாவுக்கு… இது மேலும் மேலும் வேதனையாக வளர்ந்தது. அதனால்தான் கோலாரிலிருந்து ரூபாவைப் பெண் பார்க்க இந்த கோபி வந்தபோது சில உறவினர்களின் யோசனைப்படி சொப்னாவை நான்கு வீடுகள் தள்ளி தெரிந்தவர் வீட்டில் விட்டுவைத்தாள். அப்படி ஒரு பெண் இருப்பதையே மறைத்துதான் திருமணத்தை நடத்த வேண்டியிருந்தது. ரூபாவின் நிறமும், பூரிப்பான இளமையும், எளிமையான அழகும் மிகவும் பிடித்துப்போக…