கிருஷ்ணகிரி
பழச்சாறு கடை ஒன்றில் இருவர்...
``நீட், டெட், ஐஐடி-னு எல்லாத்துக்கும் தகுதிப் பரீட்சை வைக்கிற மாதிரி எலெக்ஷன்ல நிற்கறதுக்கும் எக்ஸாம் வைக்கணும் சார்!''
``கரெக்ட்தான்... ஆனா, இங்கே எலெக்ஷன்ல நிற்கிற முக்காவாசிப்பேர் ஸ்கூலைத் தாண்டறதுக்கே திணறுனவங்களா இருக்காங்களே... எப்படி பாஸாவாங்க?''
``ஆமாமா... அதுல முக்காவாசிப்பேர் காம்பவுண்ட் எகிறி குதிச்சி தப்பிச்சி ஸ்கூலைத் தாண்டுனவங்கதான். ஆனா பாருங்க... எவ்வளவு தில்லா எலெக்ஷன்ல நின்னு ஜெயிச்சி எப்படியெல்லாம் ஆட்டம் போடுறாங்க!''
``சார், நாமெல்லாம் படிச்சவங்க... எதையும் கண்டுக்காம போறதுதான் நமக்கு அழகு... மொதல்ல ஜூஸை குடிக்க சார்... ஜூஸ் சூடாகிடப்போவுது!''
(இருவரும் சிரிக்கிறார்கள்)
கிருஷ்ணகிரி, வீ.விஷ்ணுகுமார்
மதுரை
அனுப்பானடியில் ஒரு வீட்டு வாசலில் வீட்டுக்காரரும் கேபிள் ஆபரேட்டரும்...
``ஏன் தம்பி , என்னவோ அந்த சேனலுக்கு இவ்வளவு கட்டணம், இதுக்கு இவ்வளவு கட்டணும்னு சொல்றீங்க... ஒண்ணும் புரியல''
``ஐயா, புரியுற மாதிரி சொல்லணும்னா எந்தக் கட்சி காசு கொடுத்தாலும் வாங்கிக்கிட்டு நம்ம இஷ்டத்துக்கு ஓட்டு போடறோமில்லையா... அதை மாத்தி, நமக்கு எந்தக் கட்சி வேணுமோ... அவங்க கொடுக்குற காசை மட்டும் வாங்கிக்கிட்டு கரெக்டா அவங்களுக்கு மட்டும் ஓட்டு போட்டா எப்படி இருக்கும்? அப்படித்தான் இதுவும்!''
``ஓட்டு வாங்க வர்றவங்க சொல்ற மாதிரியே நீ சொல்றதும் சுத்தமா புரியலை. காசு கொடுத்து தேர்ந்தெடுத்தாலும் ரிமோட் வேற ஒருத்தங்க கையிலதானே இருக்குது..? அட.. நான் வீட்டு நெலமைய சொன்னேன்பா.''