காற்றில் கரையாத சிற்பம்

By காமதேனு

முனைவர் சுந்தர ஆவுடையப்பன்

உலக வானொலி தினம் பிப்ரவரி 13-ம் தேதி நம்மைக் கடந்திருக்கிறது. 1989-ம் ஆண்டு. ஒரு புயல்கால இரவு. மணி பதினொன்றை நெருங்குகிறது. அந்த நேரத்தில் சென்னை வானொலி நிலையத்தின் இயக்குநர் வேணுகோபால் ரெட்டியின் வீட்டுத் தொலைபேசி ஒலிக்கிறது. வீட்டில் விழித்திருந்த ரெட்டியின் பத்துவயது மகள் ஆவலாய்ச்சென்று பேசியை எடுத்து, “யார் பேசுறது” எனத் தெலுங்கில் கேட்டார். “நான் கருணாநிதி பேசுறேன்; இயக்குநர் இருக்கிறாரா?” எதிர்முனை குரல் கரகரப்புடன் கேட்டது. “டாடி! யாரோ கருணாநிதி கூப்பிடுறாங்க!” என்று அப்பாவை அழைத்தார் அந்த அப்பாவிச் சிறுமி. பதறியடித்துக்கொண்டு போனை வாங்கிய இயக்குநர், “ ஐயா வணக்கம். சொல்லுங்கய்யா!” என்று பவ்யமாகப் பேசினார்.

“நலமா இருக்கீங்களா..? புயல் மழை வெள்ளம்அதிகமா இருக்கு. இரவுல இடைவிடாம மழை பெய்யும்போல இருக்கு. காவிரியில வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுக் கரையோர மக்களுக்குப் பெரும் பாதிப்பு வரும்போல இருக்குது! இது மாதிரி புயல் மழைக்காலங்கள்ல இரவு முழுவதும் இடைவிடாம வானொலி ஒலிபரப்பை நீட்டிப்பீங்கதானே..?” வானொலியின் நியதி தெரிந்த அப்போதைய தமிழக முதல்வர் கேட்டார். “ஐயா நிச்சயமா ஒலிபரப்பை நீட்டிக்கப் போறோமய்யா... தமிழ்நாடு முழுவதும் எல்லா வானொலியும் இரவு முழுவதும் ஒலிக்கும்; தொடர்ந்து மக்களுக்குச் சொல்ல வேண்டிய பாதுகாப்பு மற்றும் நிவாரண அறிவிப்புகளை வெளியிட்டுக்கிட்டே இருப்போம்” சொன்னார் இயக்குநர்.

“மகிழ்ச்சி! குறிப்பா காவிரிக்கரை வாழ் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லணும்னு தொடர்ந்து அறிவியுங்க. அரசு நிர்வாகம் சார்பா என்னென்ன உதவிகள், தகவல்கள் உங்களுக்கு வேணுமோ கேளுங்க; தரச்சொல்றேன். இரவு முழுக்க நானும் தூங்கப்போறதில்லை” பேசியிலிருந்து விடைபெற்றார் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE