நெருங்கி வரும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை: பதற்றத்தில் வேட்பாளர்கள், பொறுப்பாளர்கள்!

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நாள் நெருங்கிவிட்டதால் முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உச்சக்கட்ட பதற்றத்தில் உள்ளனர்.

ஜூன் 1-ம் தேதி (நாளை) பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் உள்பட 7 மாநிலங்கள் மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேசத்துக்கு உட்பட்ட 57 தொகுதிகளில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதன் முடிவுகளை எதிர்பார்த்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களும் நிர்வாகிகளும் பதற்றத்தில் உள்ளனர். தேர்தல் முடிவுகள் குறித்து பல விதமான கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், கடந்த கால வரலாற்றை பார்க்கும்போது சில நேரங்களில் கருத்து கணிப்புகளையும் மீறி தேர்தல் முடிவுகள் அமைந்துவிடும்.

அதனால், வெற்றி வாய்ப்புள்ள முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் கூட, முடிவுகள் எப்படி வருமோ என்ற கலக்கத்தில் உள்ளனர். தமிழகத்தில் தேனி, ராமநாதபுரம், நெல்லை, கோவை, விருதுநகர், தருமபுரி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, சிதம்பரம், திருப்பூர் உள்ளிட்ட முக்கிய தொகுதிகளின் தேர்தல் முடிவுகளை தெரிந்துகொள்ள அங்கு போட்டியிட்ட வேட்பாளர்களை தாண்டி, அனைத்துக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். வாக்குப் பதிவு முடிந்ததும் அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் நிர்வாகிகளும் சுற்றுலா தலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ரிலாக்ஸ் பயணங்களை மேற்கொண்டனர்.

திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூட, குடும்பத்துடன் கொடைக்கானல் சென்று ஓய்வெடுத்தார். அதேபோல் ஒருசில திமுக மாவட்டச் செயலாளர்களும் நிர்வாகிகளும் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டனர். இப்படியெல்லாம் கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக ரிலாக்‌ஸாக இருந்தவர்களை மீண்டும் ரிசல்ட் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது. நாற்பதும் நமதே என்ற திளைப்பில் இருக்கிறது திமுக.

எடப்பாடி பழனிசாமியோ, “அதிமுக 15 தொகுதிகளில் அமோக வெற்றிபெறும்” என்கிறார். பாஜக தலைவர் அண்ணாமலையோ, “கருத்துக் கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கி இம்முறை தமிழகத்திலும் மோடி அலை வீசும்” என்கிறார். வெற்றி தோல்விகளைத் தாண்டி வேறு சில கணக்குகளை சரி பார்ப்பதற்காகவும் இந்தத் தேர்தல் முடிவுகளை பதற்றத்துடன் எதிர் நோக்குகின்றன. தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள். அதிமுக பெறும் வாக்குகளை விட கூடுதல் சதவீதத்தில் வாக்குகளை பெறும் கனவில் இருக்கிறது பாஜக.

ஒருவேளை, அது நடந்தால் எடப்பாடியாரின் தலைமைக்கே கூட ஆபத்து வரலாம் என்பதால் அவரது ஆதரவாளர்கள் இன்னும் பதற்றத்தில் இருக்கிறார்கள். பாஜக இரண்டாமிடத்துக்கு வருவதால் தங்களுக்கு இப்போதைக்கு பாதிப்பில்லை என்று திமுக கருதினாலும் அந்த நிலையை பாஜக எட்டிவிடக்கூடாது என்ற பயம் திமுகவுக்கும் உள்ளுக்குள் இருக்கிறது.

இதையெல்லாம் விட, எந்தத் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் சரிவைச் சந்திக்கிறாரோ அந்தத் தொகுதியின் அமைச்சர், மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட அத்தனை பேருக்கும் பதவி தப்பாது என முன்னமே எச்சரித்திருக்கிறார் முதல்வர். இதனால், மற்ற கட்சிகளுக்கு நிகராக திமுக நிர்வாகிகளும் இப்போது பதற்றத்தில் இருக்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE