“ஏங்க நந்தினி பொண்ணு…” என்றபடி எதிரே வந்து அமர்ந்த என் மனைவியின் கழுத்தைப் பார்த்து அதிர்ந்த நான் “என்னடி நீயும் சினிமா நடிகை மாதிரி தாலியைக் கழற்றி பீரோவில் வைத்துவிட்டாயா?” என்று கேட்டதும் “என்ன உளர்றீங்க” என்றபடி கழுத்தைத் தடவி பார்த்த என் மனைவி கண்ணாடி முன் ஒரு விநாடி பார்த்துவிட்டு, பயந்துபோய் சமையலறைக்கு ஓடியவள் மஞ்சள் கயிற்றைத் தந்து “சீக்கிரம் என் கழுத்தில் கட்டுங்க” என்று நீட்ட, நான் அவள் கழுத்தில் இரண்டாவது முறையாக மூன்று முடிச்சு போட்டேன். கழுத்தில் மஞ்சள் கயிறு ஏறிய பிறகுதான் அவள் முகம் மலர்ந்தது தெரிந்தது.
“சரி தாலி என்னாச்சு”? என்று மீண்டும் நான் விஷயத்துக்கு வர அவள் “நீங்க கேட்ட பிறகுதான் என் கழுத்தில தாலி இல்லைங்கிற விஷயமே எனக்குத் தெரிஞ்சது” என்றவள் கழுத்தைத் தடவிப் பார்த்துவிட்டு “ஏங்க என் கழுத்தைத் தொடுங்க” என்றாள் நான் அவள் கழுத்தைத் தொட்டேன். “கிள்ளுங்க” என்றாள். நான் மெல்ல அவள் சொல்லியபடி கிள்ளினேன். “ஏங்க எனக்கு அங்க எந்த உணர்ச்சியும் இல்லை. நான் தொட்டது, நீங்க இப்ப தொட்டது எதுவும் எனக்குத் தெரியலையே. என்னவோ தப்பா நடந்திருக்கு” என்றாள் அழும் குரலில்.
முதலில் கழுத்துப் பகுதி மரத்துப்போனதற்கு என்ன செய்வது என்று பார்க்க அவளை டாக்டரிடம் அழைத்துச் சென்றேன். டாக்டர் “இது ஒரு கெமிக்கல். கைக்குட்டையில் வைத்துக் கழுத்துப் பகுதியைத் துடைத்தால் இருபத்தி நான்கு மணி நேரம் எந்த உணர்ச்சியும் இருக்காது. பிறகு தானாக சரியாகும்” என்று சொல்லிவிட்டு ஒரு தடுப்பூசி போட்டு அனுப்பினார். தாலிச் சரடு தொலைந்த பாதிப்பிலிருந்து அவள் விடுபட்டதுபோல் தெரியவில்லை. இருந்தாலும் அவள் பாட்டுக்கு வீட்டு வேலைகளைச் செய்துவந்தாள்.
திடீரென ஓடிவந்து “இப்போது எனக்கு கழுத்தில் உணர்ச்சி வந்துவிட்டது. தொட்டால் தெரிகிறது” என்றவள் “நீங்கள் தொட்டுப் பாருங்கள்” என்றாள். நான் தொட்டதும் கூச்சப்பட்டு நெளிய “ஆமாம் உணர்ச்சி வந்துவிட்டது” என்றேன். அப்போது “ஏங்க டாக்டர் என்ன சொன்னார்? இருபத்தி நான்கு மணி நேரம் உணர்ச்சி இருக்காதுன்னார். இப்போது மணி பன்னிரெண்டு. அப்போ நேத்து மதியம் பன்னிரெண்டு மணிக்கு ஏதோ நடந்து இருக்கணும்” என்றவள் “நேற்று மதியம் பன்னிரெண்டு மணிக்கு ராகினி அத்தையுடன் தி.நகர் போற பஸ்ஸில் ஏறினேன். அந்த பஸ்ஸில் ஏதாவது நடந்து இருக்குமா?” என்று கேட்டாள்.