இது 28 வருட அநீதி! மக்களைச் சந்திக்கும் அற்புதத்தம்மாள்!

By காமதேனு

கா.சு.வேலாயுதன்
velayuthan.kasu@kamadenu.in

“அநீதியே 28 ஆண்டுகள் போதாதா?” என்ற கோஷத்துடன், சிறையிலிருக்கும் எழுவரின் விடுதலை கோரி மக்கள் சந்திப்புப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார் பேரறிவாளவனின் தாயார் அற்புதத்தம்மாள். கடந்த 24-ம் தேதி கோவையில் தொடங்கியது அவரது பயணம். அதற்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொல்லி நான்கரை மாதம் ஆகிவிட்டது. அமைச்சரவை கூடி முடிவெடுத்த பிறகும் கவர்னர் கையெழுத்துக்காகக் காத்திருப்பதில் என்ன நியாயம் இருக்க முடியும்? நானும் ஆளுநரை சந்திச்சு மனு கொடுத்தேன். ‘ஓகே ஐ வில் டூ இட்!’ ன்னு முகமலர்ச்சியோடதான் கைகூப்பி என்னை அனுப்பி வச்சார். 

அதனால ஏதோ நான் அடுத்தநாளே புள்ளை வெளியில வந்து இந்தப் பொங்கலை அவனோட கொண்டாட முடியும்னு நம்பினேன். கவர்னர் கையெழுத்திட மாட்டார்னு நான் நம்பலை. ஆனா, இப்ப அதுதான் நடந்துட்டிருக்கு. இனியும் இதை இப்படியே விட்டா ஆகாதுன்னுதான் இந்த இயக்கத்தைத் தொடங்க ஏற்பாடு செஞ்சேன். கோவையில தொடங்கின என்னோட இந்த மக்கள் சந்திப்புப் பயணம் ஈரோடு, திருச்சி, நெல்லை, சென்னைன்னு தொடரும்’’ என்றார்.

“தேர்தல் நேரத்துல எழுவர் விடுதலை பற்றி அக்கறையா பேசறதும், அப்புறம் கண்டுக்காம விடுறதுமே அரசியல்வாதி
களோட வேலையா இருக்குன்னு அலுப்பா நினைக்கிறீங்களா?” என்ற கேள்விக்கு, “தேர்தல் பற்றிய கவலை அரசியல்வாதிக்கு இருக்கலாம்; எனக்கில்லை. இதுலயும் தேர்தலுக்காகத்தான் அரசியல் செய்யறாங்கன்னா அதை விட கேவலம் எதுவும் இல்லை. எத்தகைய குற்றமானாலும் 10 ஆண்டுகள் சிறையிலிருந்தாலே அந்த சிறைவாசியை விடுதலை செய்யலாம்னு நீதியரசர் கிருஷ்ணய்யர் சொல்லியிருக்கிறார். ஆனால் எந்தக் குற்றமும் செய்யாத என் மகன் 28 ஆண்டுகளாய் சிறையில் இருக்கிறான் என்றால் இது எத்தகைய அநீதி?’’ என்று காட்டமாகவே கேட்டார் அற்புதத்தம்மாள்! 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE