பாபநாசம் அணையில் இருந்து கோடகன் கால்வாயில் தண்ணீர் திறக்க விவசாயிகள் மனு

By அ.அருள்தாசன்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அணையில் இருந்து கோடகன் கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பிரதான அணையான பாபநாசம் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் கார் சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இதன் மூலம் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி உள்ளிட்ட வட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் சாகுபடி பணிகள் நடைபெறும். பாபநாசம் அணையில் இருந்து வடக்கு மற்றும் தெற்கு கோடை மேலழகியான் கால்வாய்கள், நதியுன்னி கால்வாய், கன்னடியன் கால்வாய், கோடகன் கால்வாய், திருநெல்வேலி மற்றும் பாளையங்கால்வாய்கள் மூலம் தண்ணீர் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பாபநாசம் அணையில் நீர் இருப்பு குறைவாக இருப்பதை காரணம் காட்டி ஒரு சில கால்வாய்களில் மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அனைத்து கால்வாய்களிலும் தண்ணீர் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டங்களையும் நடத்தி வருகிறார்கள். கடந்த ஆண்டு குறைவாக இருந்த போதிலும் கோடகன் வாயில் குறைவான அளவு தண்ணீர் திறக்கப்பட்டு 6 ஆயிரம் ஏக்கர் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன்பட்டது.

இது போல் இந்த ஆண்டும் தண்ணீர் திறக்க வேண்டும் என தாமிரபரணி பாசன கோடகன் கால்வாய் அனைத்து நீரினை பயன்படுத்துவோர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அச்சங்கத்தினர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு: பாபநாசம் அணையில் தண்ணீர் குறைவாக இருந்த போதும் நேரடி ஆயக்கட்டு பகுதிகளான சுத்தமல்லி வரை தண்ணீர் திறப்பதை அதிகாரிகள் செய்துள்ளனர். இதனால் 6 ஆயிரம் ஏக்கர் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாசன வசதி பெறும்.

கால்வாயில் தண்ணீர் குறைவாக இருந்தாலும் தண்ணீரை குறைவாக திறந்து விவசாயிகள் மற்றும் விவசாய நிலங்களை காத்திட வேண்டும். பருவமழை தொடங்கிய பின்னர் தண்ணீர் திறக்கப்பட்டால் மழையால் விவசாயம் பாதிக்கப்படும். முதல் கட்ட தேவைகளான நாற்றுப் பாவுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை உருவாகும். 4 மாத வாழை பயிரை காப்பாற்றவும், அதற்கான வேலைகளை செய்திடவும் ஜூன் முதல் தேதியில் தண்ணீரை கோடகன் வாயில் திறக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE