சென்னையில் இரண்டு நாட்கள் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 3 லட்சத்து 431 கோடி ரூபாய்க்கு 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இதன் மூலம் பத்தரை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. வரவேற்கத் தக்க விஷயம்தான்.
ஆனால், இதேபோல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும் கடந்த 2015-ல், முதலாவது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினார். அப்போது, 2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடிக்கு முதலீடுகள் பெறப்பட்டதாகவும், 98 நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாகவும் சொன்னார்கள். இதன் மூலம் 4 லட்சத்து 70 ஆயிரத்து 65 பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்றும் ‘துல்லியமாக’ அறிவித்தார்கள். அறிவித்து மூன்றாண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அதன்படி முதலீடுகள் வந்து சேர்ந்தனவா, சொன்னபடி அத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்ததா என்பது குறித்தெல்லாம் அரசுத் தரப்பில் தெளிவான அறிவிப்புகள் வந்திருக்க வேண்டும்; அப்படி வராதது ஏமாற்றமே!
மேலும், கடந்தமுறை உற்பத்தித் துறையில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 286 கோடி ரூபாய்க்கு முதலீடுகள் பெறப்பட்டதாகவும் இதில் 50 சதவீத முதலீடுகள் தென் மாவட்டங்களுக்குச் செல்லவிருப்பதாகவும் பெருமிதத்தோடு அறிவித்தார் ஜெயலலிதா. ஆனால், அப்படி பெரிய அளவிலான முதலீடுகள் எதுவும் தென் மாவட்டங்களைச் சென்றடைந்ததாகத் தெரியவில்லை. இந்த நிலையில், இப்போது கையெழுத்தாகி இருக்கும் முதலீட்டு ஒப்பந்தங்களால் தென் மாவட்டங்கள் எத்தனை சதவீதம் பயனடையப் போகின்றன என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.
மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதற்காக கோடிகளைச் செலவழித்து இதுபோன்ற மாநாடுகளை நடத்தும்போது, அதற்கு உரிய பலன் கிட்டியதா என எதிர்க்கட்சிகளும் மக்களும் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டிய பொறுப்பும் கடமையும் தங்களுக்கு உண்டு என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்!