கணேசகுமாரன்
ganeshkumar.k@kamadenu.in
பீஹாரி: குறுநாவல்கள்
ஆத்மார்த்தி
விலை: 130 ரூபாய்
வெளியீடு
டிஸ்கவரி புக் பேலஸ்
சென்னை- 78
தொடர்புக்கு: 8754507070
எழுத்தாளர் ஆத்மார்த்தியின் ஐந்து குறுநாவல்கள் அடங்கிய தொகுப்பு பீஹாரி. வெவ்வேறு களம், வெவ்வேறு மனிதர்களின் வாழ்க்கை என்ற அளவில் கவனம் ஈர்க்கிறார் ஆசிரியர். பூடகமான எழுத்தமைப்பு எதையும் தேர்ந்தெடுக்காமல் சரளமான எழுத்தில் கதைகளை வழங்கியிருப்பதற்கு பாராட்டுகள். தொகுப்பின் தலைப்புக் கதையும் முதல் கதையுமான பீஹாரியின் ஆரம்பமே நண்பனின் தோளில் கைபோட்டு பேசும் வெகு யதார்த்தமான மொழியில்தான் துவங்குகிறது. வாசகர் உள்ளே நுழைவதற்கு எவ்வித மனத் தடையும் ஏற்படுத்தவில்லை கதையாசிரியர். பீஹாரி கதையின் நாயகனுக்கு பெயர் எதுவும் இல்லாமல் ஸோ அண்ட் ஸோ என்றே குறிப்பிடுகிறார். ஒவ்வொரு முறையும் இந்த ஸோ அண்ட் ஸோ வரும்போது பேசாமல் நாயகனுக்கு பெயர் வைத்திருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது. வட நாட்டிலிருந்து தமிழகத்துக்குப் பிழைக்க வருபவர்களின் வாழ்வியல் கசப்புகளை சில பக்கங்களில் கூறிவிட்டு கதைக்குத் திரும்புகிறார். நாயகனின் தற்கொலையில் ஆரம்பிக்கும் கதை அதற்கான நியாயத்தை முன்னிறுத்தாமலே முடிந்து விடுகிறது.
கதைப்படி நாயகன் நல்லவன். ஆனால், ஆரம்பத்தில் ஆசிரியர் பிற மக்களின் கருத்தாக முன் வைக்கும் பீஹாரிகள் மோசமானவர்கள் என்ற வாதம் நிற்கும் அளவுக்கு நாயகனின் வாழ்வியல் அவலம் மனதில் நிற்கவில்லை.
இரண்டாவது கதையான ‘அரசியல் பேசாதீர்கள்’, அரசியலும் பேசுகிறது. ஒரு சினிமா பார்ப்பதற்கான சுவாரசியம் இக்கதையில் அடங்கியிருப்பதை மறுக்க முடியாது. அதற்கான கூடுதல் நம்பகத்தன்மை தோற்றுவிக்கிறது கடந்த காலத்தைச் சொன்ன முறை. கதைக்கு அவ்வளவாகத் தேவைப்படாத கதாபாத்திரங்களுக்கும் முக்கியமான டீட்டெயிலிங் எதற்கென்று தெரியவில்லை. அதேபோல் மதிராசு யார், கதைக்கு எதற்கந்த கேரக்டர் என்பதும் புரியவில்லை. கதை முடிவில் வரும் சிமென்ட் கடைக்காரரின் தொலைபேசி உரையாடல் என்ன சொல்ல வருகிறதென்று கதாசிரியரே சொன்னால்தான் தெரியும்.
மூன்றாவது கதையாய் கல் மண்டபம் இடம் பெற்றிருக்கிறது. ஒரு காதல் கதைக்கான முஸ்தீபுகள் இருந்தாலும் ’’எனக்கு காதலிக்கத் தெரியாது’’ என்று நாயகன் மூலமாய் சொல்லவைத்து இது அதுவல்ல என்பதில் கவன ஈர்ப்புத் தெரிகிறது. அதனாலோ என்னவோ கதை முடிவில் நாயகன் அடையும் காதல் வெறுப்பு உணர்வினை கொஞ்சம்கூட வாசகரால் அடையமுடியவில்லை. அதேபோல் மிகச் சாதாரணமாக நகரும் கதை நடுவில் ஜி. நாகராஜனின் வரிகளை உதாரணமாக நாயகன் சொல்வதெல்லாம் வாசிப்பு அனுபவத்தை கேலி செய்கிறது. உரையாடல்களில் ஜனரஞ்சகமான எழுத்து நடை இடம் பெறுவதெல்லாம் சரிதான். கதையே நாயகனின் சாதாரண மொழியில் விளக்கப்படுகின்றது. திடீரென்று, சர்ப்பங்களின் கூடல்கள் என்று ஆரம்பித்து போகும் பத்தியெல்லாம் ஒட்டாமல் தனித்துத் தெரிகிறது. கதை முழுவதும் இழையோடும் நகைச்சுவை தொனி சற்றேனும் காப்பாற்றுகிறது.
தொகுப்பில் சிறந்த அனுபவத்தைத் தரும் கதையாய் விரிகிறது சாம்பல் மரங்கள் கதை. அமெரிக்காவில் நடப்பதாலோ என்னவோ கதையோட்டம் ஆங்கில பாணி எழுத்தின் சாயலில் நகர்கிறது. அதுவே இக்கதையின் பலம். வாசகர் ஊகிக்க முடியாத சஸ்பென்ஸில் கதைத் திருப்பம் நிகழ்கிறது. சற்றே இறுக்கமான நடையில் தன் எழுத்தை வழங்கியிருக்கும் ஆத்மார்த்திக்கு வாழ்த்துகள். எதிர்பார்க்க வைத்து ஏமாற்றுகிறது தொகுப்பின் கடைசிக் கதையான வாசனை. கதை முற்றிலும் வாசகருக்குச் சொல்வது மன நலம் பாதிக்கப்பட்ட ஒருவன் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாதபடி கதை சொல்லல் முறை. கதை ஆசிரியருக்கு எல்லாவிதமான எழுத்தும் வருகிறது. அதுவே அவரின் பலவீனமாக மாறுவதுபோல் எக்கதை எவ்வடிவில் என்பதைத் தீர்மானிக்காமல் தருவது வாசகருக்கு அயர்ச்சியைத் தருகிறது. நிறைய ஆங்கில வார்த்தைகள் இடம்பெறுவதும் உறுத்தல். தவிர்த்திருக்கலாம்.