இதுவும் கடந்து போகும்

By காமதேனு

மதுரை எஸ்.மலைச்சாமி

“விஜியை வீட்டுக்கு அனுப்பிட்டாங்களாம்!”
சற்று நேரத்துக்கெல்லாம் அந்தக் கல்லூரி வளாகம் முழுவதும் பரவியது அந்தச் செய்தி.
இருவர் மனமொத்துக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டாலும், இந்த உலகம் ஓடிப்போய்க் கல்யாணம் பண்ணிக்கொண்டார்கள் என்று சொல்வதை இன்னும் மாற்றிக்கொள்ளாமல் இருப்பது மாதிரிதான், விஜியை வேலையை விட்டு நிறுத்தியதற்கு வேறொரு காரணமிருந்தாலும், “வீட்டுக்கு அனுப்பிட்டாங்களாம்” எனும் வார்த்தைகள், பல் இருக்கிறவன் பக்கோடா சாப்பிட்ட கதையாயிற்று அந்த மாலை நேரக் கல்லூரிப் பேருந்துக்குள்.
காலை ஐந்து மணிக்கெல்லாம் அலாரம் வைத்து எழுந்தால்தான் வீட்டில் வேலைகளை முடித்து, தன் பத்து வயது மகள் சுஹாவைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, எட்டு மணிக்கெல்லாம் அந்த முப்பதாம் நம்பர் கல்லூரிப் பேருந்தைப் பிடிக்க முடியும்.
அங்கிருந்து சரியாக ஒரு மணி நேரம் பயணம். பின்பு காலை ஒன்பது மணிக்கெல்லாம் சுமார் அறுபது பேர் கொண்ட மூன்றாம் மற்றும் நான்காம் வருட மாணவர்களுக்கு அடுத்தடுத்துப் பாடமெடுத்து, அவர்களின் வருகைப் பதிவை, கல்லூரியே தயாரித்த சாஃப்ட்வேரில் பதிவேற்றம் செய்து, அவர்களுக்குச் செய்முறை வகுப்பெடுத்து, ரெக்கார்டு நோட்டு திருத்தி, ISO,NBA மற்றும் NAAC எனத் துறை சார்ந்த கோப்புகளை தினமும் அப்டேட் செய்து, பின்பு அவ்வப்போது மாணவ, மாணவிகளின் ஒழுக்கம் சார்ந்த பிரச்சினைகள், கல்லூரித் தலைவராலும் முதல்வராலும் முன்னதாக எடுக்கப்பட்ட முடிவுக்கு மாறாக ஆசிரியர் அறிவிப்பு, உடன் வேலை பார்ப்பவர்களின் புறணிப் பேச்சுக்கள்; அதைவிட துறைத்தலைவர் ஒதுக்கும் பணிக்கும், ஏக்கப் பார்வைகளுக்கும் மீண்டும் ஒரு முறை முகம் பார்த்துப் பேச வேண்டியிருக்குமே என்ற ஒரே காரணத்துக்காகவே தன்னுடைய பல கோபங்களை அவர்கள் முன்னால் தற்கொலை செய்ய வைத்துக்கொள்வது.
பிறர் நம்மை அலட்சியப்படுத்தக் கூடாது என்பதற்காகவே பொய்களையும், சில நேரங்களில் நடிப்பையும் அடையாளமாய்… சக பணியாளர்களின் பார்வைக்கு முள்வேலியாய் தனது உடையைச் சரிசெய்துவிட்டு… அன்று மாலை வரை மீதமுள்ள பணிகள்.
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பபபபபா… அட ஆமாங்க!
விஜி! ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியையாகப் பணிபுரிகிறாள். ஆனால், விஜி இந்தப் பொறியியல் படிப்பில் சேரும்போதெல்லாம் தமிழகத்திலேயே 90 கல்லூரிகள்தான் இருந்தனவாம்.
விஜி எப்படி இந்தப் படிப்பில் சேர்ந்தாள் எனக் கேட்டால் நீங்களே சிரிப்பீர்கள்.
“எங்க காலேஜ்ல மெக்கானிகல், கம்ப்யூட்டர் சயன்ஸ், இன்ஸ்ட்ரூமென்ட்டேஷன்-னு மூணு கோர்ஸ் இருக்கு. உங்களுக்கு எந்தப் படிப்பு வேணும்?” என விஜியின் அப்பாவிடம் அந்தக் கல்லூரியின் முதல்வர் கேட்க…
“இன்ஜினீயரிங்னாலே மெக்கானிகல்தான்! ஆனா அது பொம்பளப் பிள்ளைக்கு ஒத்துவராது, கம்ப்யூட்டர் சயன்ஸ்; அது ஒரு நேரம் ஏறுது, மறு நேரம் இறங்குது. ம்…ம்…ம்… இந்தக் கடைசியா ஒண்ணு சொன்னீங்களே அதக் கொடுத்துருங்க சார்” என்றார் விஜியின் அப்பா. அப்படிப் படிச்சதுதான் இந்த இன்ஸ்ட்ரூமென்ட்டேஷன் கோர்ஸ்.
இந்தப் படிப்புக்கு வெளிநாட்டில் நல்ல ஸ்கோப் இருக்கிறது என்று யாரோ சொல்ல ஒருவழியாகச் சேர்ந்து படித்தாயிற்று. படிக்கும்போது எது வருகிறதோ இல்லையோ காதல் நன்றாக வந்துவிடுகிறது! தன் பெற்றோரின் சம்மதத்தோடு காதலனைக் கைப்பிடிக்கவே இரண்டு வருடமாயிற்று. பின்பு, ஓரிரு வருடமாகியும் குழந்தை இல்லையென, ஒருநாள் சொல்லிக்கொள்ளாமல் சென்றுவிட்டான். உறங்கிய இரவுகளை விட அவனுக்காக அழுத இரவுகளே அதிகம்.
அவன் ஓடிப்போன மறு மாதம்தான் அவள் கருவுற்றிருப்பது தெரியவந்தது. நடத்தை கெட்டவள் என விவாகரத்து வாங்க அது போதுமானதாக இருந்தது ஓடிப்போன கணவனுக்கு. கணவன் வீட்டிலிருந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய பின் பிறந்தது ஒரு பெண் குழந்தை. அப்படியே அச்சுஅசலாகக் கணவனைப் போலவே. பின்பு பெரியவர்கள் மூலமாகப் பேசிக்கொள்ளலாம் என சற்று சமாதானமடைந்தார்கள்.
என்ன செய்ய… என்றாவது ஒரு நாள் எதேச்சையாக சந்திக்க மாட்டோமா என்று ஏங்க வைக்கின்றன சில பிரிந்த உறவுகள்.
காலை நேரக் கல்லூரிப் பேருந்து பயணம். பாவம் கருவியியல் துறை போலத்தான் தன் வாழ்க்கையும் இன்று காணாமல் போகும் என்ற அவலம் தெரியாமல் அந்தப் பேருந்து பயணம். ஏனெனில், இந்த வருடமும் விஜி வேலை பார்த்துவந்த கருவியியல் துறைக்குச் சேர்க்கை இல்லை என்று சொல்லிக்கொண்டார்கள். எப்போது வேண்டுமென்றாலும் வேலையை விட்டுப் போகச் சொல்லலாம். சாகப்போகிற நாளை தெரிந்துகொண்டே வாழ்வது மாதிரிதான் இது. முன்தேதியிட்டு நிகழ்த்தப்படும் மரணம் பெரும் அவஸ்தையானது.
பேருந்தை விட்டு இறங்கியதும் அந்தக் கல்லூரி வளாகத்தின் கொடிய முகம் விஜியை பயமுறுத்தியது. உள்ளேயே இருந்த பிள்ளையார் கோயில் வரவேற்றது. எல்லோரும் எதையோ வாய்க்குள் முனங்கியபடி இருந்தனர்.
ஆசிரியர்கள் மட்டுமே சுமார் 300 பேர் வேலை பார்க்கும் கல்லூரி. யார் எப்போது சேருகிறார்கள், எப்போது நீக்கப்படுகிறார்கள் என்பது தெரியாமலேயே போய்விடும். ஆனால் விஜியை மட்டும் எல்லோருக்கும் தெரியும். படித்த கல்லூரியிலேயே பத்து வருடம் குப்பை கொட்டினால் யாருக்குத்தான் தெரியாது.
அன்று சேர்மன் கூப்பிட்டால் சந்தோஷம்; இல்லை
யென்றால் ரொம்ப சந்தோஷம் என்றுதான் இருந்தாள் விஜி.
“உங்கள சேர்மன் கூப்பிடுறார்…” என்று இன்டர் அலறியதும் கேட்கும் ஆவலைவிட பயம்தான் முதலில் தொற்றிக்கொள்கிறது. நெஞ்சில் சிறிய நடுக்கத்துடன்தான் உள்ளே சென்றாள்.
உட்காரச் சொல்லிவிட்டு “இத பாருங்க விஜி, இது ப்யூர் ப்ரைவேட் இன்ஸ்டிடியூஷன். உங்களுக்கே நல்லாத் தெரியும் நம்ம காலேஜ பத்தி” என ஆரம்பித்தார் சேர்மன் ஜெயந்த்.
சூழ்நிலையைப் புரிந்துகொண்ட விஜி “பத்து வருஷம் வேல பார்த்துருக்கேன் சார். இந்த காலேஜுக்காக நான் எவ்வளவோ நாள் மாடா உழைச்சிருப்பேன்.”
“விஜி உங்களப் பத்தி எந்த கிரீவன்ஸுமில்ல! ஆனா ஃபினான்ஷியலி நான் ரொம்ப டைட்டா இருக்கேன்” மிகச் சாதாரணமாகச் சொன்னார்.
வேலை போகப்போகிறதே என்ற வேதனையில் விஜி இருக்க, அதே சமயம் சேர்மனுக்கு எங்கிருந்தோ கைப்பேசியில் அழைப்பு வர, அதை எடுத்து சிரித்துப் பேசி, அதைத் தொடர்ந்து உரையாடல் எப்படியோ, வெவ்வேறு திசையில் சென்று முடிந்துவிட்டது. அணைத்து வைக்கப் பல நிமிடங்களானது.
என்ன செய்ய சப்பரம் தூக்குபவனின் வலி உற்சவமூர்த்திகளுக்குத் தெரிவதில்லை.
“இல்ல சார், எனக்கு நாற்பது வயசாச்சு. ஃபேமிலி, குழந்தைலாம் இருக்கு. இப்ப போயி திடீர்னு…” அவளின் குரல் அவரை எட்டவேயில்லை. விலக்க நினைத்தபோது விவாதங்கள் வீண் பேச்சு.
விஜி எவ்வளவோ சொல்லியும் அது சேர்மன் ஜெயந்த் மனதைத் தொடவேயில்லை. இந்த மாதிரியான வசனங்களைப் பலர் சொல்லிக் கேட்டவர். தகுதியற்ற இடத்தில் திறமையை நிரூபிக்க முயன்றால் தகுதியற்றுப்போவது நம் திறமைதான்.
மொத்தத்தில் திருவிழா முடிந்த கடைவீதி ஆனது. கடைசியில் ஒரு மாதச் சம்பளத்தின் காசோலையைக் கிட்டத்தட்ட கையில் திணித்து அனுப்பிவிட்டார்கள்.
நீ யாருக்கு விழுந்து விழுந்து உதவி செய்தாயோ, அவன்தான் உன்னை முதலில் துரோக வாள் கொண்டு வெட்டுவான். சில நிமிடங்கள் ஏதோ ஒரு எண்ணத்தில் உறைந்தவளாக அப்படியே வெளியே வந்து உட்கார்ந்திருந்தாள் விஜி.
முதலில் வீட்டு வாடகை, பால், மளிகை சாமான், சுஹா பாப்பாவுக்குப் பள்ளிக் கட்டணம், அதை விட இருமடங்காக இருக்கும் வேன் கட்டணம், பேப்பர்காரன், போன் ரீசார்ஜ், எல்ஐசி ஏஜென்ட் தமிழ்ராஜிடம் மாதத் தவணை பாக்கி, பெர்சனல் லோன் என விஜி ஒரு நடுத்தர வர்க்க பெண்மணி. சொந்தக்காலில் நிற்கும்போதுதான் தெரிகிறது இதுவரை நம்மைத் தாங்கிய அப்பாவுக்கு எவ்வளவு வலித்திருக்குமென்று.
என்ன செய்வதென்று அறியாது விஜி அந்தக் கல்லூரி வளாகத்தை விட்டு வெளியே வந்தாள். கல்லூரிப் பேருந்தைத் தவிர்த்து வெளிப் பேருந்தில் ஏறிக்கொண்டாள். அவளுக்குப் பிடித்த மழையும் அவளோடு சேர்ந்துகொண்டாலும் ரசிக்க மனமில்லை.
சுஹாவோடு சேர்ந்து செத்துப்போகலாமா என்று நினைக்கத் தோன்றியது. வீட்டினுள் நுழைந்ததும் சுஹா ஓடி வந்து “அம்மா” என்று கட்டி அணைத்தாள்.
மனதுக்குள் அவ்வளவு வலி இருக்கும். ஆனால் குழந்தையின் முன்னால் சிரித்து நடிக்கும் ஒரு தாயின் மனசு.
சுஹா கேம் விளையாட, விஜியின் கைப்பையினுள் கைப்பேசியைத் தேடினாள்.
“அம்மா இங்க பாரேன். உனக்கு ஒரே நம்பர்ல இருந்து நாலு மிஸ்டு கால்.”
துக்கம் விசாரிக்கத்தான் யாராவது
இருக்குமென்பதால் கால் செய்ய மனமில்லாமல் இருக்க, மீண்டும்
அதே எண்ணிலிருந்து அழைப்பு வந்
தது. நான்கைந்து இலக்கங்களைக் கொண்ட வெளிநாட்டு எண். எடுத்
ததும், “ஹலோ… விஜி மேடங்
களா?”– மெல்லிய ஆணின் குரல்.
“தம்பி… நீங்க?”
“மேம்... நான் உங்ககிட்ட படிச்ச ஸ்டூடன்ட் சரண். டூ இயர்ஸ்க்கு முன்னாடி ஃபைனல் செம்ல ‘கன்ட்
ரோல் சிஸ்டம்’ சப்ஜெக்ட்டுல அரியர்னு உங்ககிட்ட டியூஷன் படிச்சனே.”
“ஓ… ம்ம்ம்…” என்று ஏதோ சொல்லி
வைத்தாள்.
“அன்னைக்கு நீங்க மட்டும் சொல்லித்தரலனா என் லைஃப் எப்படியோ போயிருக்கும் மேடம்.”
“ம்… ம்… என்ன விஷயம்?” என்றாள் மனமில்லாமல்.
“காலேஜுக்கு போன் பண்ணி உங்க நம்பர் வாங்கினேன் மேம். பை த பை ஸாரி மேம், நீங்க இன்னைக்கு ரிலீவ் ஆயிட்டதா சொன்னாங்க. நெக்ஸ்ட் என்ன ஐடியால இருக்கீங்க மேடம்?”
“தம்பி ஒரு டூ டேஸ் கழிச்சுப் பேசிறீங்களா?” அந்த அனுதாபத்தைத் தவிர்த்தாள்.
”மேம்… சாரி ஃபார் த டிஸ்டர்ஃபன்ஸ். இந்தச் சமயத்துல நான் வேற. ஒரு விஷயம் மட்டும் கன்வே பண்ணிக்கிறேன். இங்க இன்ஸ்ட்ரூமென்ட்டேஷனுக்கு நல்ல ஸ்கோப் இருக்கு. உங்க ரெஸ்யூமை எனக்கு மெயில் பண்ணுங்க மேம். மித்த விஷயத்த நான் பாத்துக்கிறேன்.”
பந்தி பரிமாறுபவர் நமக்கு நன்கு தெரிந்தவராக இருந்தால் மனதுக்குள் ஒரு சந்தோஷம் வருமில்லையா அது போலத்தான்.
“ம்ம்… ஓகே தம்பி… என்னையும் மறக்காம போன் பண்ணீங்களே… ரொம்ப தாங்க்ஸ்” என்று விஜி சொன்னபோது அந்த முனையில் சற்று அமைதிக்குப் பின்…
“மேடம்… உங்களயெல்லாம் மறந்துட்டேன்னு சொன்னா நான்
லாம் மனுசனே இல்ல.”
விஜிக்கு என்ன சொல்வதென தெரியாமல் கைப்பேசியைக் காதிலேயே வைத்திருந்தாள்.
அந்த எண்ணைப் பதிவுசெய்து
விட்டு வாட்ஸ்அப்பிலும் இணைத்த
போது அவனுடைய ஸ்டேட்டஸ் காட்டியது.
“இரை தேடும் எறும்பு
வலை பின்னும் சிலந்தி
கூடு கட்டும் தேனீ-மண்
வீடு கட்டும் குழந்தை
இவர்களிடம் கேள்
தோல்வியைப் பற்றி!”
- விஜி, பேராசிரியை, கருவியியல் துறை.
கல்லூரி ஆண்டு மலரில் எப்போதோ இவள் எழுதியிருந்த கவிதை ஒன்றை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைத்திருந்தான்.
படித்துவிட்டு, புதிய பாதைக்கு வழிகள் ஏதும் தேவையில்லை எனத்
தனது ரெஸ்யூமைப் புதுப்பிக்க மடிக்
கணினியை ஆன் செய்தாள் விஜி.
கைப்பேசியை எடுத்துக்கொண்ட சுஹா போக்கிமானை விளையாட ஆரம்பித்தாள். வாழ்க்கையில் சறுக்குவதை, குழந்தைகளைப் போல விளையாட்டாக எடுத்துக் கொண்டாலே வாழ்க்கை அழகாகி விடும் என்றுதான் அப்போது தோன்றியது விஜிக்கு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE