டாக்டர் கு. கணேசன்
எட்டாம் வகுப்பு படிக்கும் எஸ்தருக்கு உடல் எடை அதிகம். அவள் கொஞ்ச தூரம் நடந்தாலே மூச்சு வாங்குவாள்; 'உணவைக் குறை, உடலைக் குறை' என்றால் கேட்க மாட்டாள்; ஒரு பேச்சுக்குக்கூட மைதானத்துப் பக்கம் எட்டிப்பார்க்க மாட்டாள்.
சென்ற வாரம் என்னிடம் அவள் சிகிச்சைக்கு வந்தாள். ‘எந்த நேரமும் சோர்வாக இருக்கிறது; அடிக்கடி மயக்கம் வருகிறது’ என்றாள். படிப்பதற்குப் பயந்துதான் இப்படிச் சொல்கிறாளோ என்ற சந்தேகம் பெற்றோருக்கு. ஆனால், பரிசோதனையில், அவளுக்கு நீரிழிவு இருப்பது தெரிந்தது. இத்தனைக்கும் அவள் பெற்றோருக்கு அந்த நோய் இல்லை. அப்படியானால் இந்தச் சிறு வயதில் நீரிழிவு வர என்ன காரணம்? பதின் வயது பருமன்!
இந்தியாவில் பதின் வயதினர் மட்டும் 40 கோடி பேர் இருக்கின்றனர். இவர்கள் எல்லோரும் ‘நாட்டின் நம்பிக்கை நட்சத்திரங்கள்’ என்று காலரைத் தூக்கிக்கொள்ளலாம் என்றால், எஜூஸ்போர்ட்ஸ் (EduSports) நிறுவனம் இவர்களிடம் நடத்திய ஓர் ஆய்வின் முடிவு நம்மைக் கதிகலங்க வைக்கிறது.