விழாத இடத்தில் விழுந்த மழைத்துளி- ஹரணி

By காமதேனு

காலையில் எழுந்து சீக்கிரம் குளித்தான் வேலு. முதல் நாள் இரவே நன்றாகத் துடைத்துவைத்த கரணை. மட்டப் பலகை, குண்டுநூல் கயிறு எல்லாவற்றையும் எடுத்து வெளுத்துப்போன அந்த ஜவுளிக்கடைப் பைக்குள் வைத்தான்.
“ஏய்யா இவ்வளவு சீக்கிரம் கௌம்பிட்டே?” என்ற கேள்வியை அவன் முன் வீசியெறிந்தாள் வெற்றிலைப் பாக்கு போட்ட வாயுடன் தனம். வேலுவின் மனைவி.
“இன்னிக்கு எஞ்சினியரு புதுக் கட்டிடம் ஆரம்பிக்கிறாரு… அதான்.”
“எங்க?”
“அரவ மில்லு வச்சிருக்காறே சுந்தரவதனம். அவரோட மகனுக்கு ஒரு வீடு ஆரம்பிக்கிறாரு. கொல்லங்கரை தாண்டி.”
“சரி கௌம்பு.”
எல்லாம் எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்து செருப்பு போடுகையில் முழங்கால்வரை ஏறிய கைலியுடன் பான்பராக் போட்டு கருத்த பற்கள் தெரிய வாயைப் பிளந்து கொட்டாவி விட்டுத் தூங்கும் மகனைப் பார்த்தான் வேலு.
ஒரே மகன் போதுமென்று முடிவுசெய்து பெற்று வளர்த்த மகன். ஒதியன் பெருத்து உத்தரத்துக்கு ஆகுமா என்றாகிவிட்டது.
“பாரு ஆபீசரு ராத்திரியெல்லாம் கண்ணுமுழிச்சி பைலு பாத்துட்டுக் களப்புல தூங்கறாரு.”
“அவன ஏன் கரிச்சுக் கொட்டறே? ஒன் வேலயப் பாத்துக்கிட்டுப் போ.”
“என் வேலயப் பாக்கத்தான்டி போறேன். ஆனா ஒன்னோட செல்லத்துலதான் இப்படிக் குட்டிச்சுவராப் போயிட்டான். ஒவ்வொரு நாளும் பக்குபக்குன்னு மனசு கெடந்து அடிச்சுக்குது... என்னிக்கு என்ன ஆவுமோன்னு.”
“ஏய்யா பெத்த வாயாலே சாவம் வுடுறே? போய்யா.”
“உண்மயத்தான்டி சொல்லுறேன். இந்த மாசத்துலே ரெண்டு பேர் கதய முடிச்சிட்டாங்க.”
“வாயக் கழுவு. எம்புள்ளக்கி ஒண்ணும் ஆவாது.”
“ஆவக் கூடாதுன்னுதான் தவிக்கிறேன். அன்னிக்கி இன்ஸ்பெக்டரு வீட்டுல மாடி ஒட்டும்போது சொன்னாரு… பேசாம ஒம்புள்ளய உன்னோட வேலைக்கி அழச்சிட்டுப்போ உசிராவது மிஞ்சும்னு. கேக்க மாட்டேங்குறான்டி.”
அதற்குள் திண்ணையில் உறங்கிக்கிடந்தவன் கலைந்து எழுந்து பாம்பு தலையை உயர்த்துவதுபோல உயர்த்திப் பார்த்தான்.
“எம்மாடி உம் புருஷன் என்ன காலயிலே புலம்பு
றாரு? போய்க் கரணயப் புடிச்சமா கட்டடத்தை ஒசத்து
னோமான்னு இருக்கச் சொல்லு. நம்ப ரூட்டே தனி.”
“ஏன்டா இந்த வயசுல ஒன் மேல எத்தன கேசு தெரியுமா?”
“இருக்கட்டும். என்ன கொலையா பண்ணிப்புட்டேன், கொலைகேசு போடறதுக்கு? இல்ல அடிதடியா? ஒன்லி அபேஸிங். ரொம்ப டீசன்டா தொழில் பண்ணறேன். அப்பப்ப போலீசுக்கு மாமுலும் ஓகே ஆயிடுது. போ... போ... என் உசிரு ரொம்பக் கெட்டி ஒன் கரணயவிட.”
மறுபடியும் படுத்துக்கொண்டான்.
வேலு தலையில் அடித்துக்கொண்டே கிளம்பிப் போனான்.
வேலு எத்தனையோ முயற்சி செய்தும் பலனளிக்க
வில்லை. ஒரே மகன் குமார் படிக்கவேயில்லை. பத்தாவது பெயிலோடு நின்றுபோய்விட்டது.
“நாந்தான் கரண புடிக்கிறேன். உனக்காவது இந்த பொழப்பு வேண்டாம்டா. நாலு எழுத்து படிச்சா ஏதாச்சும் அரசாங்க வேல கெடக்கும்ல.”
“போய்யா… நமக்கு பிசினஸ்தான் லாயக்கு.”
என்னென்னவோ தொழில்செய்கிறேன் என்று அவ்வப்போது பணம் வாங்கிப்போவான். வேலுவும் மனைவி தொல்லை தாங்காமல் கைசேமிப்பு, தண்டலுக்கு, வட்டிக்கு, மீட்டர் வட்டிக்கு எனக் கொடுத்துக் கொடுத்துச் சலித்துப்போனான்.
குமாருக்குத் தொழில் பிடிபடவில்லை. ஆனால் தகாத நண்பர்கள் பிடிபட்டார்கள்.
சீட்டாடுவது, குடிப்பது, அசந்தால் சின்னத் திருட்டுகளில் ஈடுபடுவது. அதிலும் பணம் போதவில்லை. ஆகவே, குமார் வேறு முடிவு எடுத்தான்.
சைக்கிளில் போய் யாருமில்லாத இடத்தில் நடந்து போகிற வயதான பெண்களின் சங்கிலிகளை அறுத்தான். போன விலைக்கு விற்ற காசில் குடிப்பதும் ஆடுவதுமாக களித்தான். இப்படியே போனது. நிறைய சிறு வழக்குகள் இவன் மேல் பதிவாயின. அபராதம் கட்டிக் கட்டி தனம் ஒரே பிள்ளை என்று கொண்டுவந்து சேர்த்தாள். வருமானம் போதவில்லை. வேலு தர முடியாது என்று மறுத்துவிட்டான்.
“போய் ஜெயில்ல உக்காந்து நாலஞ்சு வருஷம் களி தின்னு உடம்பு வணங்கினா திருந்திப்புடுவான் ஒன் மவன். இனி சல்லி பைசா நான் தர முடியாது.”
தனம் கைமுறுக்கு சுற்றிக் கடைகடையாகப் போட்டு அப்புறம் குழுவில் சேர்ந்து என ஏகப்பட்ட பணத்தை வாங்குவதும் குமாரை நீதிமன்றத்தில் அபராதம் கட்டி அழைத்துவருவதுமாக வாழத் தொடங்கிவிட்டாள்.
“ஏன்டா குமாரு... என்னால முடியல்லடா. இந்தப் பொழப்பு வேண்டான்டா. எந்த சென்மத்துலேயும் இதுக்கு விமோசனமே கெடயாதுடா.”
குமார் கேட்கவில்லை.
ஆனாலும் குமார் வயதொத்த வெவ்
வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட
வர்கள் ஒரே மாதத்தில் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். வேலு
வுக்கு அடிவயிற்றைக் கலக்கியது. ஆயிரமானாலும் ஒரே பிள்ளை
யாயிற்றே என்று. ஆனாலும் அவனாலும் திருத்த முடியவில்லை. கவலைப்பட்டான். ஆனாலும் ‘யார் தலயில என்ன எழுதியிருக்கோ… அதான் நடக்கும்’ என்று வெறுத்துப்போய்விட்டான்.
ஆனாலும் குமார் திருந்துவதாக இல்லை.
“என்ன வேலு இன்னிக்குப் புதுவேலையா?” என்று கேட்ட இன்னொரு கொத்தனாரின் கேள்வியால் நினைவு கலைந்தான்.
அன்றைக்கு பத்தாம் தேதி.
வங்கியில் எல்லாம் வயதானவர்கள் கூட்டமிருக்கும். ஓய்வூதியம் வாங்குபவர்கள். அதிலும் குடும்ப ஓய்வூதியம் வாங்குபவர்கள் அதிகம் இருப்பார்கள். அதாவது வயதான பெண்கள். அதுவும் கைநாட்டு வைப்பவர்கள்.
குமார் உள்ளே நுழைந்தான். பட்டனைத் தட்டி டோக்கன் ஒன்றை எடுத்துக்கொண்டான். கையில் ஒரு பாஸ்புக்
இருந்தது. உள்ளே இருப்பவர்களை ஒவ்வொருத்தராக நோட்டமிட்டான். வயதான பெண்கள் கூட்டம் அவன் எதிர்பார்த்தது போலவே அதிகம் இருந்தது.
கொக்கு காத்திருப்பதுபோல காத்திருந்தான். வயதான ஒரு மீன் வந்தது.
“தம்பி... இந்த பாரத்த எழுதிக்கொடு.”
“என்ன பாரம் ஆத்தா?”
“என்னோட பிஞ்சின்பா… எட்டாயிரம். முழுசா வேணும். எழுதிக்கொடு” என்று சொல்லிவிட்டுப் படிவம், கணக்குப் புத்தகம் எல்லாவற்றையும் அவன் கையில் கொடுத்தாள். உடனே தான் எழுந்துகொண்டு அவளை உட்காரச் சொன்னான்.
“எவ்வளவு சொன்னே ஆத்தா?” மறுபடியும் கேட்டான்.
“எட்டாயிரம்பா.”
குமார் படிவத்தை எழுத ஆரம்பிக்கவும், உட்கார்ந்தவள் அழ ஆரம்பித்தாள்.
குமார் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தான்.
“ஏந்த்தா அழுவுறே?”
“கண்ணே கண்ணுன்னு ஒத்தப் புள்ளயப் பெத்தேன். யாருக்கும் அடங்காம போச்சு. எப்ப பாத்தாலும் போலிசு கேசுன்னு நின்னிச்சு. சொன்னத கேக்கலே. சேராத இடத்துல போய் இன்னிக்கு ஆசுபத்திரியில உசுருக்குப் போராடிக்கிட்டிருக்கு.”
“அதுக்கா இந்தப் பணம் ஆத்தா?” பாசத்தோடு கேட்பதுபோல கேட்டான் குமார் படிவத்தை எழுதிக்கொண்டே.
“ஆமாம்பா. எப்படியும் பொழைக்காது அதுன்னு டாக்டரு சொல்லிட்டாங்க. செத்துப்போனா யாரு காரியம் பாக்கறது? அது எனக்குப் பாக்க இருக்க நான் அதுக்குப் பாக்கப்போறேன். எல்லாம் விதி. நாலு பேரு காறித்துப்ப மாட்டாங்க. என்னவாயிருந்தாலும் பெத்தவதானே… அதான் இந்தக் காச அதுக்காக எடுக்கறேன்.”
எழுதிக்கொண்டிருந்த குமார் சட்டென்று எழுதுவதை நிறுத்தி அந்த வயதான தாயைப் பார்த்தான். அவளின் எட்டாயிரத்தை இன்றைக்குத் தட்டிக்கொண்டு போய்விடலாம் என்று யோசித்தான். அதுவும் சுலபம்தான். ஆனால் அவன் மனதுக்குள் என்னவோ செய்தது. அது என்னவென்று தெரியவில்லை.
அதற்கு மேல் பேசாமல் படிவத்தை எழுதிக்கொடுத்துவிட்டு அதை கவுன்டரில் கொடுத்துவிட்டு “போத்தா... போய் ஒம் பணத்த வாங்கிக்க” என்று சொல்லிவிட்டு வெளியே 
வந்தான்.
மனதுக்குள் எதுவோ அவனைப் பிசைந்தது. இதுபோல அவன் என்றுமே நினைத்ததில்லை. நேராக வேலு வேலை பார்க்கும் கட்டிடம் நோக்கி நடந்தான். கட்டிடம் நெருங்குகையில் வேலு மகனைப் பார்த்துவிட்டான். இங்கே எதற்கு வருகிறான்?
“என்னடா இங்க வந்திருக்கே?”
“நானும் உன்னோட வேலை பாக்க வந்திருக்கேம்பா” என்ற மகனை அதிசயமாகப் பார்த்தான் வேலு.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE