கரு.முத்து
திருச்சி சோமரசம்பேட்டை காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளர் ஒருவர் இரவுப் பணியில் இருந்த பெண் காவலருக்கு முத்தம் கொடுத்தார். சமூக வலைதளங்களில் வெளியான இந்தக் காட்சி காவல்துறையின் கண்ணியத்தை மீண்டும் ஒருமுறை கேள்விக்குறியாக்கி இருக்கிறது!
யாரும் பெரிதாகக் கேள்வி கேட்பதில்லை என்பதால் காவல் பணியில் இருக்கும் பெண்களை இப்படி போகப் பொருளாய் நோக்குவது அண்மைக்காலமாகவே அதிகரித்து வருகிறது. கோவையில், நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் பெண் உதவி ஆய்வாளர் ஒருவரை உதவி ஆணையர் ஒருவர் கூட்டத்தை கலைக்கும் சாக்கில் மார்பில் மீண்டும் மீண்டும் கைவைத்து தள்ளியதை சமூகம் பார்த்து பதறியது. தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி முருகன் மீது அவருக்குக் கீழ் பணியாற்றும் பெண் காவலரே புகாரளித்து அதிரவைத்தார். காஞ்சிபுரம் மாவட்ட ஆயுதப் படை உதவி ஆய்வாளர் ஒருவர் பெண் காவலருக்கு செல்போனில் பாலியல் டார்ச்சர் செய்ததை வாட்ஸ் -அப்பில் கேட்டோம்.
இளையான்குடி காவல் நிலையத்தில் எஸ்பிசிஐடி தலைமைக் காவலராக இருந்த செந்தாமரைக்கண்ணன் என்பவர் பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தை மாநில மனித உரிமை ஆணையத்துக்கு எடுத்துச் சென்றார் ஒரு பெண் உதவி ஆய்வாளர். எட்டு ஆண்டுகள் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கின் முடிவில், செந்தாமரைக்கண்ணனுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாக அப்போதைய சிவகங்கை மாவட்ட எஸ்பி ராஜசேகரன் மீது துறை ரீதியான நடவடிக்கைக்குப் பரிந்துரைக்கப்பட்டது. செந்தாமரைக்கண்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இடைப்பட்ட எட்டு ஆண்டுகளில் அந்தப் பெண் உதவி ஆய்வாளர் சந்தித்த நெருக்கடிகள் கொஞ்ச நஞ்சமல்ல!