சாலை மார்க்கமான பணிகளை விரைந்து முடிக்க மின்சாரம், குடிநீர் வாரியங்களுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவு

By ச.கார்த்திகேயன்

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் சாலையை வெட்டி மேற்கொள்ளப்படும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று சென்னை குடிநீர் வாரியம் மற்றும் மின் வாரியத்துக்கு மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மாநகரப் பகுதிகளில் சென்னை குடிநீர் வாரியம், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் மின் வாரியம் சார்பில் மேற்கொள்ளப்படும் சேவை பணிகள் மாநகராட்சியிடம் அனுமதி பெற்று சாலைகளை வெட்டி மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வாறு சாலைகள் வெட்டப்படும் போது, பணிகளில் ஏற்படும் தாமதங்கள், ஒப்பந்ததாரர்கள் ஏற்படுத்தும் தாமதங்கள் காரணமாக, சாலைகளில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, போக்கு வரத்து நீண்ட நாட்கள் தடை செய்யப்படுவதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகின்றனர். இதை தவிர்க்க மாநகாரட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதன்படி, திட்டப் பணிகளை மேற்கொள்ள நிர்ணயிக்கப்பட்ட கால அளவுக்குள் அப்பணிகளை முடிக்க வேண்டும். அருகில் மருத்துவமனைகள், பள்ளிகள், பேருந்து நிலைங்கள் இருந்தால், அது தொடர்பாக போக்குவரத்து மாற்றம் குறித்த அறிவிப்பு பலகைகளை தொடர்புடைய துறைகள் வைக்க வேண்டும். பிரதான பணிகள் முடிந்து, வீடுகளுக்கு இணைப்பு வழங்கும் பணிகள் மட்டும் நிலுவையில் இருந்தால், மற்ற பகுதிகளில் சீரமைப்பு பணிகளை முடிக்க வேண்டும்.

பணிகள் நடைபெறும் பகுதியில் பொதுமக்கள் வராதவாறு பாதுகாப்பு தடுப்புகளை முறையாக ஏற்படுத்த வேண்டும். காலக்கெடுவை தாண்டி நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க தொடர்புடைய துறைகள் ஒப்பந்ததாரர்களுடன் ஆலோசனை நடத்தி பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE