டாக்டர் கு. கணேசன்
மென்பொருள் நிறுவனத்தில் அவர் ஓர் இளைய அதிகாரி. “குனிய முடியவில்லை. நிமிர முடியவில்லை. முதுகுவலி கொல்கிறது’’ என்று, மனைவி யின் துணையோடு என்னிடம் சிகிச்சைக்கு வந்தார். “மூச்சுப் பிடிப்பாக இருக்கும் என்று சில வீட்டுப் பக்குவங்களைச் செய்து பார்த்தேன். வலிவிட்ட பாடில்லை. ஒரு மாதமாக வலி வருகிறது” என்றும் கூறினார்.
முறையான பரிசோதனைக்குப் பிறகு, “உங்களுக்கு முதுகெலும்பு தேய்ந்திருக்கிறது; சவ்வு வீங்கியிருக்கிறது” என்று சொன்னேன். “அதெல்லாம் வயதானவர்களுக்குத்தானே! இந்த வயதிலுமா?” என்று அதிர்ச்சியுடன் கேட்டனர் அந்தத் தம்பதியினர்.
“முதியவர்களுக்கு மட்டுமே முதுகுவலி வந்த காலம் முடிந்துவிட்டது. இப்போதெல்லாம் பத்து வயது பாலகனையும் அது படுத்துகிறது” என்று சொல்லி, இன்றைய வாழ்க்கைமுறைகளுக்கும் முதுகுவலிக்கும் உள்ள தொடர்பைப் புரியவைத்தேன். அதற்குப் பிறகுதான் அவர்கள் சிகிச்சைக்கே சம்மதித்தனர்.
முதுகுச் சங்கிலி தெரியுமா?
நம்மால் நேராகப் பார்க்க முடியாத ஒரே இடம் நம் முதுகு. நாம் அதிகம் அலட்சியப்படுத்தும் இடமும் அதுதான். கழுத்துக்குக் கீழே பரந்து விரிந்த முதுகில் மேல்முதுகு, கீழ்முதுகு என இரண்டு பகுதிகள் உண்டு. அங்கே ஓர் அச்சாணிபோல் அமைந்திருக்கிறது முதுகெலும்பு.
‘முதுகெலும்பு’ என்று நாம் ஒருமையில் அழைத்தாலும் அது ஒரே எலும்பால் ஆனதல்ல. கழுத்திலிருந்து இடுப்புவரை 33 எலும்புக் கண்ணிகளால் ஆன முதுகுச் சங்கிலி அது. 12 எலும்புகள் ஒன்றோடொன்று கோக்கப்பட்டு, சற்று பின்புறமாக வளைந்துள்ளது மேல் முதுகெலும்பு. ஐந்து எலும்புகள் கோக்கப்பட்டு சற்று முன்புறமாக வளைந்துள்ளது கீழ் முதுகெலும்பு. இடுப்புக் கட்டுக்கும் மார்புக் கூட்டுக்கும் நடுவில் உள்ள ‘லம்பார்’ (Lumbar) எனப்படும் அந்தக் கீழ் முதுகுதான் நம் கட்டுரையின் கதாநாயகர்.
முதுகெலும்பைக் கூர்ந்து கவனித்தால் ஏறக்குறைய ஆங்கில எழுத்து ‘S’ மாதிரி அது வளைந்திருக்கும். சாலை வளைவுகளில் வாகனங்கள் சுலபமாகத் திரும்புவதற்குச் சாய்ந்த மேடான திருப்பங்கள் தேவைப்படுவதுபோல் முதுகெலும்பு சிரமமில்லாமல் இயங்குவதற்கு இந்த வளைவுகள் அவசியம்.