சைஸ் ஜீரோ 19: தைராய்டு பிரச்சினையைத் தவிர்ப்போம்

By காமதேனு

சில தொற்று நோய்களையோ அல்லது லைஃப் ஸ்டைல் நோய்களையோ நம்மிடம் அண்டாமல் வரும்முன் காத்துக் கொள்ளலாம். அந்த ரகத்தைச் சேர்ந்ததுதான் ஹார்மோன் இம்பேலன்ஸ் பிரச்சினைகளும். பெண்கள் தங்களைத் துரத்துவதாகக் கருதும் தைராய்டு பிரச்சினையையும்கூட முறையான வாழ்வியலால் எளிதாகத் தவிர்க்கலாம். அதற்கு முதலில் உங்கள் உடலுக்கு நீங்கள் நன்றியுடன் இருக்க வேண்டும்.

இது புதிதாக இருக்கிறதே என்கிறீர்களா? புதிதுதான் ஆனால் அவசியமானது. யோசித்துப் பாருங்கள்... உங்கள் உடலுக்கு எப்போதாவது நீங்கள் நன்றி சொல்லியிருக்கிறீர்களா? இடைவிடாது துடிக்கும் இதயம், நில்லாமல் காற்றை சுழற்சி செய்யும் நுரையீரல், ரத்தத்தில் இருந்து அசுத்தங்களைப் பிரித்து வெளியேற்றும் சிறுநீரகம் என இன்னும் பல உள்ளுறுப்புகளால் ஆன இந்த உடலுக்கு நீங்கள் என்றாவது நன்றி சொல்லியிருக்கிறீர்களா?
ஆனால், லேசான தலைவலியோ, வயிற்றுவலியோ இல்லை கொஞ்சம் அதிகப்படியான நோயோ வந்துவிட்டால் உடலை சரமாரி வசைபாடி விடுகிறீர்கள் மிக சர்வ சாதாரணமாக! தீதும் நன்றும் பிறர்தர வாரா. உடல் நோவும் அப்படித்தான். உண்ணும் உணவும் உடற்பயிற்சியும் முறையே சரியாக இருந்தால் நோயும் சோர்வும் ஏன் வரப்போகிறது?! இதைப் புரிந்துகொண்டு உடலுக்கு நன்றி சொல்லுங்கள்.

பெண்களே நீங்கள் இதுவரை கடைப்பிடிக்கா விட்டாலும்கூட பரவாயில்லை. இனியாவது உங்கள் உணவு முறையையும் உறக்க நேரத்தையும் உடற்பயிற்சிப் பழக்கத்தையும் உங்களோடும் உங்கள் உறவுகளோடும் நீங்கள் கொண்டிருக்கும் பந்தத்தையும் உங்களது உடல் எனும் கோயிலைப் பேணும் வகையில் மறுகட்டமைத்துக் கொள்ளுங்கள்.

அதில் முதல் முயற்சியாக தைராய்டு அளவுகளைக் கட்டுக்குள் வைத்திருப்பதைப் பற்றித் தெரிந்து கொள்வோம். தைராய்டு என்றால் என்ன எனக் கேட்பவர்களுக்கு நம் தொண்டைப் பகுதியில் மூச்சுக்குழாய்க்கு முன்பாக, குரல்வளையைச் சுற்றி, இரு பக்கமும் படர்ந்து, ஒரு வண்ணத்துப்பூச்சி வடிவத்தில் அமைந்துள்ளதே... அதுதான் தைராய்டு சுரப்பி என அடையாளப்படுத்துகிறேன். இந்தப் பட்டாம்பூச்சியை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE