இனியும் எங்களைத் தொந்தரவு செய்தால்..! -மிரட்டும் காடுவெட்டி குருவின் மருமகன் -பதிலடி கொடுக்கும் பாமக

By காமதேனு

உச்சகட்ட பரபரப்பை எட்டியிருக்கிறது காடுவெட்டி குருவின் குடும்ப விவகாரம். குருவின் அம்மா, சகோதரிகள், மகன், மகள், ஒருபக்கமாவும், மனைவி சொர்ணலதா ஒருபக்கமாகவும் பிரிந்து நிற்க, குருவின் மகள் விருதாம்பிகை தனது அத்தைமகன் மனோஜ்கிரணை கடந்த 28-ம் தேதி திடீரெனக் கரம்பிடித்தார். சொர்ணலதா உள்பட யாருக்கும் தெரியாமல் நடந்த இந்தத் திருமணத்தை குருவின் சகோதரியான செந்தாமரை என்ற மீனாட்சியே முன்னின்று நடத்தினார்.



திருமணம் முடிந்து, குருவின் சமாதிக்கு வழிபடச் சென்ற மனோஜும் விருதாம்பிகையும் காடுவெட்டி கிராமத்து மக்களின் எதிர்ப்பால் அங்கிருந்து திரும்பிவிட்டார்கள். மனோஜின் அம்மா சந்திரகலாவும் ஊரைவிட்டு வெளியேற்றப்பட்டார்.

இதையடுத்து, தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாக மனோஜும் விருதாம்பிகையும் போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார்கள். இவர்களுக்கு ஆதரவாக குருவின் மகன் கனலரசு நிற்க, குருவின் மனைவி சொர்ணலதாவோ டாக்டர் ராமதாஸ் பக்கம் நிற்கிறார்.

இந்நிலையில், குரு குடும்பத்தில் என்னதான் நடக்கிறது என்பதை அறிய மனோஜ்கிரணிடம் பேசினேன்.

இந்த திடீர் திருமணத்துக்கான காரணம் என்ன?

“விருதா (விருதாம்பிகை) பிறந்த போதே நிச்சயிக்கப்பட்ட திருமணம் இது. ‘விருதாவை உம்மகனுக்கு கட்டிக்
கலைன்னா என் உறவே இல்லாமப் போயிடும்’னு மாமா எங்கம்மாகிட்ட சொல்லியிருக்காங்க. இப்படியெல்லாம் பேசி வச்சதாலதான் நாங்க ரெண்டு பேரும் லவ் பண்ணவும் ஆரம்பிச்சோம்.

போன நவம்பர்ல எங்க அண்ணனுக்குக் கல்யாணம் நடந்தப்பவே எங்க கல்யாணத்தையும் நடத்திடலாம்னு மாமா சொன்னாங்க. ஆனா, ‘நீ குணமாகி வந்ததும் நடத்திக்கலாம்’னு அவரைச் சமாதானப்படுத்திட்டாங்க. ஆனா, அதுக்கு வாய்ப்பில்லாம மாமா இறந்துட்டாங்க. வருசம் திரும்பட்டும்னு நாங்களும் அமைதியா இருந்தோம். ஆனா அதுக்குள்ள விருதாவுக்கு, வேற மாப்ள பார்க்க ஆரம்பிச்ச ராமதாஸ் ஐயா, எனக்கு விருதாவைக் கட்டிக்குடுக்கக்கூடாதுன்னு கனல்கிட்டயும் சொல்லிருக்காரு. விருதாவைத் தூக்கிட்டுப் போயி கட்டாயக் கல்யாணம் பண்ணிவைக்கப் போறதா எல்லாம் செய்திகள் வந்துச்சு. இனியும் தாமதிக்கக் கூடாதுன்னுதான் நாங்க கல்யாணத்தை முடிச்சுக்கிட்டோம்.

விருதாவை உங்களுக்குக் கட்டி வைப்பதில் ராமதாஸுக்கு என்ன ஆட்சேபம்?

அதாங்க எனக்கும் தெரியல. இவளுக்கு என்னைய பிடிக்கலன்னாகூட பரவாயில்லை. ரெண்டுபேரும் விரும்பி கல்யாணம் செஞ்சுக்கிறோம். இத தடுக்கிறதுக்கு இவங்க யாரு? இதுல தலையிட அவங்களுக்கு என்ன உரிமை இருக்கு?

தனிப்பட்ட வேறு காரணம் எதாவது இருக்கும்னு நினைக்கிறீர்களா?

வன்னியர் சங்க அறக்கட்டளை மாமா பேர்ல இருக்குது. அதைக் கைப்பற்றத்தான் எங்க அத்தையை (குருவின் மனைவி) அவங்க கட்டுப்பாட்டுல வச்சிருக்காங்க. அத்தை, விருதாம்பிகை, கனலரசு மூணு பேரும் கையெழுத்துப் போட்டாத்தான் அத மாத்த முடியும். அதுக்காகத்தான் ராமதாஸ் ஐயா தன்னோட சொந்தக்காரப் பையனுக்கு விருதாவைக் கட்டிவைக்க நினைச்சாரு.

அப்படின்னா அறக்கட்டளை சொத்துக்காகத்தான் நீங்கள் விருதாவைத் திருமணம் செய்துகொண்டீர்களா?

சொத்து என்னங்க சொத்து... அது எங்களுக்கு வேண்டாம். அந்தச் சொத்து எவ்வளவு இருக்குன்னுகூட எங்களுக்குத் தெரியாது. எங்க மாமாவோட விருப் பத்தை நிறைவேத்தறதுக்காக நாங்க கல்யாணம் செஞ்சுகிட்டோம். அதுக்காக எங்கள மிரட்டுறது, எங்கம்மாவை, ஆயாவை அடிக்கிறதுன்னு அவங்க இறங்கிட்டாங்க. ஆட்களைக் கொண்டாந்து இறக்கிவெச்சுக்கிட்டு எங்கள ஊருக்குள்ள வரக்கூடாதுன்னு மிரட்டுறாங்க. இதுக்கெல்லாம் நிச்சயம் அவங்க பதில் சொல்லியே ஆகணும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE