மதுரை ஒ.முருகன்
omuru1969@gmail.com
“அத்து விடுங்கப்பா... ஒத்துவராது. இனிமேலாச்சும் நிம்மதியாருக்கணும்” வடக்கு வீட்டுத் தப்பக்காலன் கத்துனான்.
“ஆனா ஊன்டா அத்துவுட்றதிலயே குறியா இருக்காய்ங்க. ஆம்பளன்றதனாலஅவக்குன்டு சொல்லிப்புட்டாய்ங்க. பொம்பள என்னய கொஞ்சமாச்சும் ஓசிச்சுப்பாத்திங்களா?” அழுகய அடக்க மாட்டாம பொலபொலன்டு வழிஞ்சு வர்ற கண்ணீரத் தொடைக்காம, பஞ்சாயத்து ஆளுகளப் பாத்துத் தேம்பிக்கிட்டே தப்பக்காலன் பொஞ்சாதி சுப்பம்மா கேட்டாள்.
காஞ்ச கருவாடுமாரி கரேன்டு ஒட்டிப்போன ஒடம்பு, பழசா இருந்தாலும், அலசிப்போட்டு உடுத்தியிருந்த சேலய திமுரா ஒதறி எந்திரிச்ச ராக்காயி “அழுது... மூக்கச் சிந்தியே காரியம் சாதிச்சுப்புட்றா. வெறுஞ்சிறுக்கி மக” மாமியாக்காரி ராக்காயி எகுறுனா.