பிடித்தவை 10

By காமதேனு

என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

தமிழ் இலக்கியப் பரப்பில் மலையாள மொழிபெயர்ப்புக்கெனத் தனி இடத்தை அடைந்திருப்பவர் கே.வி.ஜெய. பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்ட ஜெய, தமிழில் எம்ஃபில் பட்டம் பெற்று, திருவண்ணாமலை அருகில் உள்ள கொளக்குடி அரசுப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணி செய்கிறார்.

மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் இவரது படைப்புகளுக்கு பெரும் முக்கியத்துவம் உண்டு. அப்படி, பால்சக்காரியா கதைகள், நிலம் பூத்து மலர்ந்த நாள், சந்தோஷ் ஏச்சிகானத்தின் கதைகள் உள்பட இதுவரை 12 நூல்களை மொழிபெயர்த்துள்ளார். திருப்பூர் கலை இலக்கியப் பேரவை, திருப்பூர் தமிழ்ச்சங்கம் ஆகிய அமைப்புகளின் விருதுகள், நல்லி திசைஎட்டும் விருது உள்பட ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளவரின் பிடித்தவை பத்து இங்கே…

ஆளுமை: அறிவியலில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், இலக்கியத்தில் தி.ஜானகிராமன், பிரபஞ்சன்.

கதை: ஜெயகாந்தனின் ‘அக்கினிப் பிரவேசம்’, எஸ்.ராமகிருஷ்ணனின் ‘அவளது வீடு’, கோணங்கியின் ‘கறுப்பு ரயில்’, ச.தமிழ்ச்செல்வனின் ‘பாவனைகள்’, ராம் தங்கத்தின் ‘திருக்கார்த்தியல்.’ ஊர்: திருவண்ணாமலை. எந்த மலைப் பிரதேசங்களில் பயணம் செய்துவிட்டு வந்தாலும் அண்ணாமலை வடிவைப் பார்க்கையில் ஏற்படும் நிறைவு வேறு எங்கும் கிடைத்ததில்லை.

தலம்: இமாலயம். வாசிப்பினூடே சென்றதல்லாமல், வாழ்வில் ஒருமுறையாவது தரிசிக்க நினைக்கும் தலம்.

கவிதை: ‘தாகங்கொண்ட மீனொன்று’ என்னும் ரூமியின் கவிதைத் தொகுப்பு.

பயணம்: இப்போதும் சட்டை நுனியைப் பிடித்துக்கொண்டு சிக்குபுக்கு... சிக்குபுக்கு... கூ... என சிறுகுழந்தைகளோடு விளையாடுவதில் மிகுந்த விருப்பத்தைத் தரும் ரயில் பயணமும், இன்னும் வாய்த்திராத, இப்போதும் அந்த ஒலி கேட்டால் அண்ணாந்து பார்ப்பதைத் தவிர்க்க முடியாத விமானப் பயணமும்!

படம்: Innocent voices, children of heaven, ஆமி (மலையாளம்)

நூல்: விக்டர் ஹியூகோவின் ஏழைபடும்பாடு, தி. ஜா. ராவின் மரப்பசு, செம்பருத்தி, அம்மா வந்தாள், உயிர்த்தேன், பிரபஞ்சனின் வானம் வசப்படும், திருமாவேலனின் பெரியோர்களே தாய்மார்களே, ஷோபா சக்தியின் ‘ம்', ச.பாலமுருகனின் சோளகர் தொட்டி, இமையத்தின் ஆறுமுகம், லஷ்மண் கெய்க்வாட்டின் உச்சாலியா, எஸ்.ராமகிருஷ்ணனின் யாமம்.

செயல்: கையில் இருக்கும் பணமோ, காசோ எதிரில் அதன் தேவை கருதி யார் கேட்டாலும் எனக்கென்று எடுத்து வைக்காமல் முழுவதுமாகக் கொடுத்துவிடுவது.

மேற்கோள்: ‘சிலருடைய பெருந்தன்மை பலருடைய மரியாதையைக் காப்பாற்றுகிறது’  என்னும் நா.பார்த்தசாரதியின் 
வரி.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE