கஜா : கண்ணீரில் மிதக்கும் டெல்டா!

By காமதேனு

கரு.முத்து
muthu.k@kamadenu.in

கஜா புயலை எதிர்கொள்ள மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக மாற்றுக் கட்சி ‘வசிஷ்டர்’கள் வாயால் பலே பட்டம்பெற்ற தமிழக அரசு, புயலுக்குப் பிந்தைய மீட்புப் பணிகளில் டெல்டா மக்களின் தீராத சாபத்துக்கு ஆளாகி இருக்கிறது!

கஜா தாக்குதலில் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்கள் அந்தலை சிந்தலையாகிக் கிடக்கின்றன. எதிர்பாராத இந்தத் திடீர் தாக்குதலிலிருந்து எப்போது மீண்டு வருவோம் என்று அந்த மக்களுக்கும் தெரியவில்லை. அரசாலும் அறுதியிட்டுச் சொல்லமுடியவில்லை. புயல் பாதித்த பெரும்பாலான பகுதிகளுக்கு ஆறு நாட்களுக்குப் பிறகும்கூட அரசு அதிகாரிகளோ அமைச்சர்களோ செல்லமுடியாத நிலை. இதனால், தங்களது வாழ்வாதாரத்தை அள்ளிக்கொடுத்துவிட்டு தெருவில் கிடக்கும் மக்களுக்கு அரசின் மீது இயல்பாகவே கோபம் கொப்பளிக்கிறது. அது ஆங்காங்கே சாலை மறியலாகவும் முற்றுகையாகவும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. “அரசியலுக்காக மக்களை சிலர் தூண்டிவிடுகிறார்கள்” என்கிறார்கள் அமைச்சர்கள். ஆனால், டெல்டா மக்களோ, “உங்களது இயலாமையை மறைக்க பிரச்சினையை திசைதிருப்பி எங்களைக் கொச்சைப்படுத்தாதீர்கள்” என்று அமைச்சர்களுக்கு எதிராகக் கொந்தளிக் கிறார்கள். ஒரு சில இடங்களில் எம்எல்ஏக்களுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டுமளவுக்குத் தகித்துக் கிடக்கிறது அந்த மக்களின் கோபம்.

பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட வந்த முதல்வர், வானிலையைச் சாக்காக வைத்து பாதியிலேயே பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பினார். உண்மையில், பாதிக்கப்பட்டு நிற்கும் மக்களின் கேள்விகளுக்கு முதல்வரிடம் பதில் இல்லை என்பதே இதற்குக் காரணம். கஜாவின் கோரத் தாக்குதலுக்கு ஆளான பகுதிகளில் 20 சதவீதம் பகுதிகளைக்கூட அரசு அதிகாரிகளால் இன்னமும் தொடமுடியவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE