பட்ரோஸ் என்கிற பாகுபலி - கண்ணம்மாள் பகவதி

By காமதேனு

ஊர் பூரா ‘காணவில்லை’ போஸ்டர் ஒட்டிட்டான் சித்தார்த்து. மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டு, மாட்டுத்தாவணி, பழங்காநத்தம், அவனியாபுரம், அலங்காநல்லூர், சோழவந்தான், சமயநல்லூரு, கருப்பாயூரணி, குருவித்துறை இந்தப் பக்கம் மிளகரணை, சிக்கந்தர்சாவடின்னு சுத்துப்பட்டு பூராம் எல்லா கிராமத்திலையும் ஆள் வச்சு ஒட்டிட்டான். போஸ்டர்ல ‘நாந்தான்டா வீரன், நல்லமுத்துப் பேரன்’ங்கிற மாதிரி தோரணையா போஸ் குடுத்துட்டு நிக்கிது பட்ரோஸு. அழகு பெத்த செவலை. சித்தார்த்தோட உசிரு. கீழ எழுதிருக்கான், ‘ஜல்லிக்கட்டு காளை - பேரு பட்ரோஸ். 

பட்ரோஸுன்னு கூப்பிட்டா திரும்பிப் பார்க்கும். செவலைக் காளை. நெத்திப்பொட்டு மட்டும் சுத்த வெள்ளை. உள்ளங்கை அகலத்துக்கு . கண்டுபிடிச்சிக் குடுக்குறவங்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும்.செல்நம்பர் 9946187177.’ போற சனம் வார சனம் நின்னு போஸ்டரைப் படிச்சுப் பார்த்துட்டு 'மாட்டைக் காணோம்னு அடிச்சி ஒட்டிருக்கான் பாருடி!’ன்னு ஆத்தாத்துப் போகுதுங்க.

பட்ரோஸ் காணாமப் போயி ஒரு வாரம் ஆகுது. “மெட்ராசுக்குப் படிக்கப் போகையில படிச்சுப் படிச்சுச் சொல்லிட்டுப் போனானே பய. இந்த வருசம் ஜல்லிக்கட்டுக்கு நம்ம பட்ரோஸை விடணும்... பாத்து அது வயிறு வாடாம பாத்துக்குங்க அப்படின்னானே பத்து வாட்டம். அவங் காலேஜுல இருந்து வந்தான்னா வீட்ல இருக்கிற அம்புட்டுப் பேரையும் கிழிச்சிக் கேப்ப நட்டுப்புடுவானடி மருதா’’கிழவி செல்லம்மா உண்மையிலே பேரனுக்குப் பயப்புடுறா.

பட்ரோஸ் மேல உயிரையே வச்சிருக்கானே சித்தார்த்து... அது இவனிடம் அடிமையாகிற மாதிரி வேற யார்கிட்டையும் ஆகாது. அதில ஏகப்பட்ட பெருமை சித்தார்த்துக்கு. ஜவான் மாதிரியிருக்கிற பட்ரோஸுக்கு மனஸ்ஸா தீனி வைப்பான். தெனம் நாலு கட்டு சோளத்தட்டை, கொண்டைக்கடலை சுண்டல் எரநூறு கிராம், நாட்டுக்கோழி முட்டை ஓட்டோட ரெண்டு, பருத்திக்கொட்ட நாலு கிலோ, கொள்ளு, கோதுமைத் தவிடு, மக்காச்சோள மாவு, பேரீச்சைப்பழம் எரநூறு கிராம் அப்படின்னு ஒருநாத் தீனிக்கு நானூறு ரூபாலேர்ந்து ஐந்நூறு ரூபாய் வரைக்கும் ஆகுது. அப்படிக் கண்ணுக்குக் கண்ணா வச்சிருந்த காளையக் காணும். “போன் போட்டு போட்டு ஓய்ஞ்சி போச்சுத்தா’’ தலையில இருக்கிற முண்டாச அவுத்தபடியே ஆஸு ஊஸுன்னு உள்ள நொழைஞ்ச ராசுத்தேவர் பெற்றவளிடம் சொல்லிக்கொண்டே வழியிற வேர்வையைத் தொடைக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE