தம்பி
மனிதர்களுக்கு எப்போதும் எதையும் பெரிதுபடுத்திப் பேசுவதில் மட்டுமல்ல, பெரிதுபடுத்திப் பார்ப்பதிலும் ஆர்வம் அதிகம். அந்த ஆர்வத்தின் அடிப்படையில் பிறந்தவைதான் தொலைநோக்கிகள் (telescopes), இருநோக்கிகள் (binoculars), நுண்ணோக்கிகள் (microscopes). இந்த நோக்கிகளின் வருகைக்குப் பிறகு மனித அறிவியல் அடைந்த உச்சத்தின் பலனை நாமெல்லாம் தற்போது பலவகைகளிலும் அறுவடை செய்துகொண்டிருக்கிறோம். பிரபஞ்சத்தைப் பற்றியும் உயிர்களைப் பற்றியும் புரிந்துகொள்ள இந்த நோக்கிகள் நமக்குப் பெரிதும் உதவுகின்றன.
இவற்றுள் தொலைநோக்கிகளின் இடம் மிகவும் தனித்துவமானது. பிரபஞ்ச அளவின் தொலைவை அருகாக நமக்கு மாற்றித்தருபவை இவை.
இப்போது ஒரு கேள்வி. உலகிலேயே பெரிய தொலைநோக்கி எது? கூகுளில் தேடினால் ‘கிரான் டெலெஸ்கோப்பியா கனேரியாஸ்’ (Gran Telescopio Canarias) என்று ஒரு நொடியில் விடையை அள்ளித்தந்துவிடும். ஸ்பெயினுக்குச் சொந்தமான கனேரி தீவுகளில் 2007-ல் திறக்கப்பட்ட இந்தத் தொலைநோக்கியின் ஆடி விட்டம் 10.4 மீட்டர். எரிமலைக் குழம்பால் உருவான இந்தத் தீவில் கடல் மட்டத்திலிருந்து 2,267 உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தத் தொலைநோக்கிக்கு ஆன செலவு இந்திய மதிப்பில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய்!
உலகிலேயே பெரிய தொலைநோக்கி என்று கேட்டால் இந்தத் தொலைநோக்கியைத்தான் கூகுள் விடையாக நமக்குத் தரும். ‘பிரபஞ்சத்திலேயே பெரிய தொலைநோக்கி எது?’ என்று கூகுளிடம் கேட்டுப் பார்த்தால் அதனிடம் விடை இருக்காது. சரி, கூகுளுக்குப் பதிலாக விடையை நாம் தேடிப் பார்க்கலாமா? விடை ரொம்பவும் எளிதானதுதான். நம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால், பல நேரங்களில் கைப்புண்ணுக்கும் கண்ணாடி தேவைப்படுகிறதல்லவா?