தலை தீபாவளி மாது- கிரேஸி மோகன்

By காமதேனு

நமது கதாநாயகன் மாதவன் என்கிற மாது, ஒரு பிறவி சங்கோஜி. ஆம்பளையாகப் பிறந்து தொலைத்த தோஷத்துக்காக, மாதுவுக்குக் கதாநாயகன் அந்தஸ்து கொடுக்க வேண்டியதாகிறது. மற்றபடி குணாதிசயங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் மாதுவுக்கும், படிதாண்டாப் பத்தினிக்கும் குறைந்தபட்ச ஒற்றுமை கோடி தேறும். அதீதமான கூச்சத்தால் மாதுவுக்கு அர்த்தமில்லா பயங்கள். பல்லி, கரப்பில் ஆரம்பித்து, சிறுவயதில் சாதம் ஊட்ட அம்மா ‘பூச்சாண்டி’ என்று காண்பித்த பால்கார பால்பாண்டி வரை யாரைப் பார்த்தாலும் பயம். பயத்தின் பக்கவிளைவாக அல்பமான சந்தேகங்கள். வீட்டுக்கு அடிக்கடி வந்து போகும் தந்தையின் நண்பர் இன்ஸ்பெக்டர் பாஷ்யம், ஜஸ்டிஸ் சதாசிவம், தாயோடு வம்பளக்க வரும் காசி பாட்டி – இவர்களில் யாரோ ஒருவர் முகமூடிக் கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்தவர் என்பது மாதுவின் சந்தேகமான நம்பிக்கை.

குறிப்பாக, காசி பாட்டியின் பேரில் அவனுக்கு எப்போதும் ஒரு கண். காரணம், பாட்டிக்குக் காசி என்னும் ஆம்பளைப் பெயர் எப்படி வந்தது? ஒருவேளை புனைப்பெயரில் கொள்ளையடித்துப் பாட்டி தப்பிவிடப் பார்க்கிறாளோ..? – இப்படிப் பல கேள்விகளில் மூழ்கிக் கிடந்த மாது, பாட்டி மண்டையைப் போடும்வரை அவளைப் பூலான்தேவியாகப் பாவித்து வந்தான்.

கூச்சம், பயம், சந்தேகம் போதாதென்று, பத்தாத குறைக்குப் பவளக் கொடியாக மாதுவுக்கு அந்தக் கால லேடீஸ் ஸ்பெஷல் அயிட்டங்களான அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு போன்ற நால்வகைக் குணங்களும் அவ்வப்போது வந்து வந்து போகும்.

ஆனால், மாதுவை நேருக்கு நேர் சந்திப்பது என்பது லஞ்சம் வாங்காத ஆபீஸ், சுலபமான எல்.கே.ஜி. அட்மிஷன், பத்தே நிமிடத்தில் புடவை செலக்ட் செய்யும் பெண்மணி, விலைவாசி குறைப்பு போன்ற சாத்தியப்படாத, நம்ப முடியாத சமாச்சாரங்களுக்குச் சமமான ஒன்றாகும். சுபாவத்திலேயே சங்கோஜியாக இருப்பதால் நாலு பேரைச் சந்திக்க திராணியில்லாத கூச்ச மாது எப்போதும் பாண்டவர்களைப் போல் அஞ்ஞானவாசத்தில் இருப்பது வழக்கம். பத்து மணி ஆபீஸுக்கு விடியற்காலை ஐந்து மணிக்கே எழுந்து, முதல் பஸ் பிடித்துச் சென்று மாலை ஐந்து மணிக்கு ஆபீஸ் விட்டதும் பொறுமையாகக் காத்திருந்து ஆள் நடமாட்டம் குறைந்து ஊர் அடங்கியதும் இரவு பத்து மணி கடைசி பஸ் பிடித்து வருவான்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE