ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு அரசியலில் இருந்து ராகுல் காணாமல் போவார்: எல்.முருகன் உறுதி

By KU BUREAU

சென்னை: ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு அரசியலில் இருந்து ராகுல் காந்தி காணாமல் போய்விடுவார் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியது: அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பது இந்தியாவில் ஒவ்வொருவரின் கனவு. ஜெயலலிதாவும் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று உறுதியாக இருந்தார். அதேபோல், பொது சிவில் சட்டம் வேண்டும் என்றார். சட்டப்பிரிவு 370 எப்போது நீக்கப்படும் எனமாநிலங்களவையில் பேசியிருக்கிறார். ஜெயலலிதா தொடர்ந்து, இந்துத்துவா மீதும், ஆன்மிகத்தின் மீதும் நம்பிக்கை கொண்டவராக இருந்தார். இதற்கு ஆதாரம்வேண்டும் என்றால், மாநிலங்களவை குறிப்பில் இருப்பதை எடுத்து பாருங்கள்.

தமிழகத்தில் இருப்பவர்கள் ஒடிசா அரசியலை பற்றி தவறான தகவல்களை பரப்பி கொண்டிருக்கிறார்கள். ஒடிசா முதல்வரை இயக்குவது ஒரு அதிகாரி. அவர் தவறான செயல்களை செய்து கொண்டிருக்கிறார் என்பதை தான் எடுத்து கூறியிருக்கின்றனர். அதைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும். இதுகுறித்து விவாதிக்க வேண்டிய அவசியமே இல்லை.

ஜூன் 4-ம் தேதி பாஜகவுக்கு மிகப்பெரிய திருவிழாவாக இருக்க போகிறது. அந்த நாளுக்கு பிறகு அரசியலில் இருந்து ராகுல் காந்தி காணாமல் போய்விடுவார். 400 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சி அமைக்கும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE