பெரியகுளம்: பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 51 அடியாக உயர்ந்ததைத் தொடர்ந்து முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணை உள்ளது. பெருமாள் மலை, பாலமலை, பண்ணைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழைநீர் இங்கு சேகரமாகிறது. அணை மூலம் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 259 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
57அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு 44 அடியாக இருந்தது. தொடர்மழை காரணமாக நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வந்தது. இன்று மாலை அணையின் நீர்மட்டம் 51 அடியாக உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது.
கரையோர கிராமங்களான தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, பரசுராமபுரம், திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலகுண்டு, புதூர், ஆலங்குளம் சிவஞானபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 53 அடியில் இரண்டாம் கட்ட எச்சரிக்கையும், 55 அடியில் இறுதிக்கட்ட எச்சரிக்கையும் அறிவிக்கப்பட்டு வரும் உபரிநீர் அப்படியே வெளியேற்றப்படும் என்று நீர்வளத்துறையினர் தெரிவித்தனர்.
அணைக்கு தற்போது நீர்வரத்து விநாடிக்கு 23 கன அடியாக உள்ளது. அணை நிரம்ப உள்ளதால் இருமாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
» கோவை அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை: வனத் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு
» மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் விருப்ப ஓய்வில் செல்ல தனியார் நிறுவனம் அறிவிப்பு