கோவை - மருதமலை வனப்பகுதியில் குட்டியுடன் உடல்நலம் குன்றிய பெண் யானைக்கு சிகிச்சை

By ஆர்.ஆதித்தன்

கோவை: கோவை மருதமலை பகுதியில் குட்டியுடன் உள்ள உடல்நலம் குன்றிய பெண் யானைக்கு வனத்துறை சார்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோவை வன சரகம், தடாகம் பிரிவு, மருதமலை சுற்றுக்கு உட்பட்ட மருதமலை அடிவார சரக பகுதியில் வனத்துறையினர் இன்று (மே 30) ரோந்து மேற்கொண்டனர். அப்போது, யானை பிளிறும் சத்தம் கேட்டு களப் பணியாளர்களுடன் தணிக்கை செய்யப்பட்டது. அப்போது பெண் யானை ஒன்று குட்டியுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் பெண் யானை சற்று உடல்நிலை சரியில்லாமல் இருப்பதும், குட்டி யானை அருகில் இருப்பதும் தெரியவந்தது. இதுதொடர்பாக மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், மண்டல வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணி ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கோவை வனச்சரக பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆகியோருடன் குழு அமைத்து யானைக்கு சிகிச்சை மற்றும் பழங்கள் உணவாகக் கொடுக்கப்பட்டது. மேலும் யானை மற்றும் குட்டியை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE