கோவை அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை: வனத் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு

By ஆர்.ஆதித்தன்

கோவை: கோவையை அடுத்த தடாகம் சோமையனூரில் குடியிருப்புப் பகுதியில் புகுந்த சிறுத்தை ஒன்று வீட்டு சுற்றுச்சுவரில் இருந்த கோழியை கவ்வி சென்றது.

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதியில் உள்ளது. இதனிடையே கடந்த சில மாதங்களாக தடாகம் சாலை கணுவாய் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது. கோவை தடாகம் அருகே சோமையனூர் திருவள்ளுவர் நகர் பழனியப்பா லே அவுட் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் தனது வீட்டில் கோழிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு கோழி தொடர்ந்து சத்தமிட்டதால் சந்தேகம் அடைந்த சக்திவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியில் வந்து பார்த்தனர்.

அப்போது, சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்தது. இதில் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்தபோது, சிறுத்தை ஒன்று வீட்டுக்குள் புகுந்து கோழியை கவ்வி சென்றது தெரியவந்தது. இது குறித்து, அப்பகுதி பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து கோவை வனச்சரகர் திருமுருகன் கூறும்போது, "கோவை தடாகம் பகுதியில் சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் உள்ளது. எனவே, பொதுமக்கள் இரவு நேரங்களில் தேவையில்லாமல் வெளிய வரக் கூடாது. சிறுத்தை மிகவும் வெட்கப்படும் குணம் கொண்டவையாகும். இதுவரை மாடு மற்றும் கோழிகளை வேட்டையாடி சென்றுள்ளது. இதுவரை பொதுமக்கள் யாரையும் தாக்கவில்லை. வனத்துறை சார்பில் தொடர்ந்து ரோந்து சென்று சிறுத்தை நடமாட்டத்தைக் கண்காணித்து வருகிறோம்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE