பட்டுவாடா -கலைச்செல்வி

By காமதேனு

நிற்காமல் வழிந்த நீரைத் துடைக்க முயலாமல் நடந்தான் அவன். கண்ணுக்கெட்டிய தொலைவில் குடிசையின் உச்சிகள் தெரியத் தொடங்கின. இது அவனுக்குப் புதிய ஊர் அல்ல. அடிவாரத்திலிருந்து சிறிதளவே உயரத்தில் இருந்த இந்த ஊரைச் சேர்ந்த சிறுவர்கள் அவன் வகுப்பில் படித்திருக்கிறார்கள். இப்போது இறந்துகிடக்கும் அவனுடைய அம்மா இங்கு கத்தரி வற்றலும் அப்பளமும் உப்பு மாங்காயும் கொண்டுவருவாள். அதற்கு ஈடாகப் பண்டமோ பணமோ வாங்கிக்கொண்டு திரும்புவாள். சோனியாய்த் திரியும் நாய்கள், சாணம் மொழுகிய களங்கள், கால்நடைகள், வளர்ப்புச் செடிகளைத் தொடர்ந்து குடிசைகள் தென்படத் தொடங்கின. தபால்களைக் கொடுக்கவும் சேகரிக்கவுமாகச் சென்ற அவனது அப்பா இப்போது இங்குதான் இருக்கிறார் என்று திடீரென்று அதீதமாக நம்பத் தொடங்கினான். அந்த நம்பிக்கையின் முடிவில் ஆற்றுப்படுத்த முடியாத அழுகை வந்தது. அவரைப் பார்த்துவிட்டால் போதும் என்று மனதார எண்ணினான்.

கண்ணீரும் கம்பலையுமாக நின்ற அவனைப் பார்த்ததும் அந்த ஊர் பதறிப்போனது. நிறுத்தவியலாத அழுகையோடு அவர்களிடம் தகவலைச் சொன்னான். “அடப்பாவீ… நல்லாருந்த பொம்பளைக்கு என்னாச்சு திடுப்புன்னு…” என்று அங்கலாய்த்தது. அவனுடைய அப்பா நேற்று மதியமே கிளம்பிவிட்டதாக வருத்தம் தெரிவித்தது, “ஒங்கப்பா தபாலு மட்டுமா கொண்டாருவாரு… நாட்டுல தேசத்தில நடக்கற நல்லதுகெட்டத அவரு வாயால கேட்டாதானே கேட்டாப்பல இருக்கும். மனுசன் இனிம ஒடஞ்சில்ல போயிடுவாரு” என்று சொல்லிவிட்டுச் சோற்றையள்ளி இலையில் வைத்தார்கள். அவன் தீவிரமாக மறுத்து அழுதான்.

“தம்பி அவுத்தால மல கொஞ்சம் செங்கூத்தா போவும்… பாத்துக்க. வேணும்னா யாரவாது அனுப்பி வுடவா ஒத்தாசக்கு” தவிப்பாய் உபசரித்தார்கள். அதையும் மறுத்துவிட்டுக் கிளம்பினான்.

மலையேற்றம் அத்தனை புதிதில்லை என்றாலும் ஏற ஏற மலைப்பாதை அவர்கள் கூறியது போல செங்குத்தான பாதையாக இருந்தது. தன்னையும் ஒருநாள் அழைத்துச்செல்லுமாறு அம்மா, அப்பாவைக் கேட்டிருக்கிறாள். அதை நினைத்துக்கொண்டபோது மீண்டும் அழுதான். அப்பா பாசக்காரர்தான். ஆனால், பணியில் இடையூறுகள் வருவதை விரும்புவதில்லை. அவரை இப்போதே பார்த்துக் கதறி அழ வேண்டும் என்ற தோன்றியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE