போடி: வைகையின் துணை ஆறுகளின் இரு கரைகளும் வெகுவாய் ஆக்கிரமிக்கப்பட்டு குறுகி வருகின்றன. இதனால் மழைக் காலங்களில் நீரோட்டத்தின் தன்மை பாதிக்கப்பட்டு உரிய நீர் வைகை அணைக்குச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக வைகை அணை விளங்குகிறது. வைகை அணைக்கு பிரதான நீர்வரத்தாக மூலவைகை மற்றும் முல்லை பெரியாறு நீர் உள்ளது. இதில் வைகை ஆற்றின் நீரோட்டத்துக்கு பெரிதும் கைகொடுப்பவை அதன் துணை ஆறுகளே. மாவட்டத்தைச் சுற்றிலும் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பெய்யும் மழைநீரை வைகை ஆற்றுக்கு கொண்டு வந்து சேர்ப்பவை இந்த துணை ஆறுகளே. குறிப்பாக சுருளியாறு, வராக நதி, மஞ்சளாறு, பாம்பாறு, வரட்டாறு, கொட்டக்குடி ஆறு உள்ளிட்ட பல ஆறுகள் வைகை ஆற்றின் நீரோட்டத்தை பெருக்கி வருகின்றன.
இதுபோன்ற பல்வேறு துணை ஆறுகள் வைகை அணைக்கு அதிகளவில் நீரை கொண்டு வந்து சேர்க்கின்றன. பெரும்பாலும் இந்த ஆறுகளில் மழை மழைக்காலம் உள்ளிட்ட சில மாதங்களில் நீர் வரத்து இருக்கும். இதனால் இதன் இருகரைகளிலும் ஆக்கிரமிப்புகள் வெகுவாய் அதிகரித்து விட்டன. தென்னை மரங்கள், இலவம் மரங்கள் மற்றும் இதர மரப்பயிர்களை வளர்த்து அப்பகுதி வெகுவாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் கரைகள் மேட்டுப்பகுதியாக மாறி ஆற்றின் அகலமும் குறைந்து விட்டன.
இன்னும் சில இடங்களில் புதர்மண்டி ஆற்றின் ஓரப்பகுதிகள் மண்மேடுகளாகவும் மாறிவிட்டன. ஆகவே மழைக் காலங்களில் நீர் பெருக்கு அதிகரிக்கும் போது நீரோட்டத்தின் தன்மை குறைகிறது. இதனால் வெள்ள நீர் பக்கவாட்டுப்பகுதியை உடைத்துக் கொண்டு பாதிப்பை
ஏற்படுத்துகிறது. மேலும், உரிய நீர் வைகை அணைக்குச் சென்றடையாத நிலையும் ஏற்படுகிறது. ஆகவே, நீர்வளத்துறையினர் ஆற்றுப் பகுதிகளை கண்காணித்து இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
» நெல்லை டவுன் பகுதியில் சமோசா கடையில் கேஸ் சிலிண்டர் வெடித்து 3 பேர் காயம்
» பயறு வகை சாகுபடிக்கு ரூ.49 லட்சம் நிதி ஒதுக்கீடு: கோவை விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு
இது குறித்து தமிழக தேசிய விவசாயிகள் சங்க தேனி மாவட்டத் தலைவர் சீனிராஜ் கூறுகையில், “இது போன்ற ஆக்கிரமிப்புகளால் வாழையாறு உள்ளிட்ட பல பகுதிகளிலும் ஆறுகளின் அகலம் வெகுவாய் குறைந்துவிட்டது. அதிகாரிகளிடம் புகார் கூறினால் அளவீடு செய்வதில் தாமதம் செய்கின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற நிதி இல்லை என்கிறார்கள். நிலத்தின் மதிப்பு கூடிக் கொண்டே இருப்பதால் பெருமுதலாளிகள் பலர் இது போன்ற ஆக்கிரமிப்புகளில் அதிகம் ஈடுபடுகின்றனர்” என்றார்.