பல் நலம் காப்போம்!

By காமதேனு

கிராமத்து முதியவர் ஒருவர் பல் பிரச்சினைக்காகப் பல் மருத்துவரிடம் சென்றிருக்கிறார். அவருடைய பற்களைப் பார்த்ததும், “உங்களுக்கு நீரிழிவு இருக்கிறது. அதைச் சரிசெய்தால்தான் பல் பிரச்சினையைத் தீர்க்க முடியும்!” என்று சொல்லி என்னிடம் அனுப்பிவைத்தார் பல் மருத்துவர். முதியவரின் ரத்தத்தைப் பரிசோதித்தேன். அதில் சர்க்கரை அளவு 400 மி.கி. இருந்தது. நீரிழிவைக் கட்டுப்படுத்தி, பல் சிகிச்சைக்கு அவரைத் தயார்செய்தேன். இப்படி, ஒருவருக்கு நீரிழிவு இருப்பதை முதன்முதலில் கண்டுபிடித்துச் சொல்வது பொதுமருத்துவர்களைக் காட்டிலும் பல் மருத்துவர்கள்தான் அதிகம்.

உறவினர் ஒருவர் பல் வலிக்காகப் பல் மருத்துவரிடம் சென்றபோது “இசிஜி எடுக்க வேண்டும்” என்றதும் பதறிப்போய் என்னிடம் வந்தார். ‘பல் வலிக்கு எதற்கு இசிஜி?’ எனக் கேட்டார். “சிலருக்குப் பல்லில் ஏற்படும் வலி மாரடைப்பு வலியாகவும் இருக்கலாம். அந்தச் சந்தேகத்தைப் போக்குவதற்கு இசிஜி அவசியம்!” என்றேன். அன்றைக்கு அவருடைய இசிஜியில் மாரடைப்பு இருப்பது உறுதியானது.

எட்டாவது படிக்கும் ஏழுமலைக்கு ஈறுகளில் ரத்தம் கசிகிறது என்று பல் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றான். சரியாகவில்லை. என்னிடம் வந்தான். பல பரிசோதனைகளுக்குப் பிறகு அவனுக்கு ரத்தத்தில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இப்படி, சாதாரண சொத்தைப் பல்லில் தொடங்கி, உயிரைப் பறிக்கும் புற்றுநோய் வரை பல்வேறு நோய்களைக் காட்டிக்கொடுக்கும் கண்ணாடி நம் பற்கள். முகம் காட்டும் கண்ணாடியைக் கையாளும் கவனத்தில் பாதியளவு இருந்தாலே பல்லுக்குப் போதுமான பாதுகாப்பு கிடைத்துவிடும். ஆனால், அறியாமையிலும் சூழல் அழுத்தத்திலும் நாம் கவனக்குறைவாக இருப்பதுதான் பல் நலம் கெடுவதற்குக் காரணம். சென்ற ஆண்டில் ‘Global adult tobacco survey’ சொன்ன இந்தப் புள்ளிவிவரம் அதற்கு ஆதாரம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE