பள்ளிக்கு மொய் எழுதிய புதுமணத்தம்பதி!

By காமதேனு

கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தால் திருமணம் முடிந்த கையோடு கோயிலுக்குப் போவார்கள். ஆனால், ராஜேஷும் அகிலாவும் தாலிகட்டி முடிந்த கையோடு, தாங்கள் படித்த பள்ளிக்குப் போயிருக்கிறார்கள். ஏனென்று கேள்வி கேட்காமல் மேற்கொண்டு படியுங்கள்.

மன்னார்குடி அருகேயுள்ள பாலையக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷும் அகிலாவும் உள்ளூர் அரசுத் தொடக்கப் பள்ளியில் ஒன்றாகப் பயின்றவர்கள். இப்போது ராஜேஷ் பொறியாளர்; அகிலா முதுகலை பட்டதாரி. பள்ளியில் படித்த காலத்தில் இவர்களுக்கு வகுப்பெடுத்த ஆசிரியர் ஜோன்ஸ். “உங்களுக்கெல்லாம் திருமணம் நடக்கும்போது மறக்காமல் நீங்கள் படித்த பள்ளிக்குச் செல்லுங்கள். அந்த நாளின் நினைவாக உங்கள் பள்ளியில் ஒரு மரக்கன்றை நடுங்கள். அல்லது ஒரு ஆயிரம் ரூபாய் செலுத்தி உங்கள் பள்ளியின் புரவலராகி நீங்கள் படித்த பள்ளிக்கு நன்றிக்கடன் செலுத்துங்கள்” என்று எல்லாக் குழந்தைகளுக்கும் பொதுவாகச் சொல்லியிருந்தாராம்.

இதை எத்தனை குழந்தைகள் கடைப்பிடித்தார்களோ தெரியவில்லை... ராஜேஷும் அகிலாவும் இதை மறக்காமல் நினைவில் வைத்திருந்தார்கள். கடந்த வாரம் இவர்களுக்குத் திருமணம். தாலிகட்டி முடிந்ததும் இருவரும் தாங்கள் படித்த பள்ளிக்குச் சென்றார்கள். அங்கு போனதும் ஆளுக்கு ஆயிரம் ரூபாய் எடுத்து ஒரு கவரில் வைத்து அதன் மீது ‘பள்ளியின் மொய் நூல்’ என்று எழுதி தலைமையாசிரியரிடம் தந்து ஆசிபெற்றார்கள். அத்துடன் தங்களைப் பள்ளியின் புரவலர்களாகவும் பதிவுசெய்து கொண்டார்கள். இதில், இன்னொரு சிறப்பு என்ன தெரியுமா... சிறுவயதில் இவர்களுக்கு இந்த யோசனையைச் சொன்ன ஆசிரியர் ஜோன்ஸ் தான் இப்போது அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர்!

அம்மா வழியில் அமைச்சர்களுக்கும் பூரண கும்பம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE