டாக்டர் கு. கணேசன்
சஹானா ஒரு பன்னாட்டு மோட்டார் நிறுவனத்தில் மென்பொருள் ஆய்வாளர். இன்னும் திருமணம் ஆகவில்லை. அண்மையில் அவர் முகத்தில் பருக்கள் முளைத்து அசிங்கப்படுத்தின. வீட்டு சிகிச்சைகள் செய்து பார்த்தார். பலனில்லை. விடுமுறையில் ஊருக்கு வந்தபோது அம்மாவுடன் என்னைச் சந்திக்க வந்தார்.
சஹானா பருமனாக இருந்தார். முகத்தில் மெல்லியதாக மீசை முளைத்திருந்தது. கைகளில் முடிகள் தெரிந்தன. “மாதச் சுழற்சி சரியாக வருகிறதா?” எனக் கேட்டேன். “இல்லை டாக்டர்! சில மாதங்களாக இரண்டு, மூன்று மாதங்கள்கூடத் தள்ளிப்போகிறது. அப்படியே ஆனாலும் அதிகமாகப் போகிறது” என்றார். எனக்கு அவருடைய பிரச்சினை புரிந்துவிட்டது.
அவர் அம்மாவிடம், “உங்கள் மகளுக்கு வயிற்றை ஸ்கேன் எடுத்துப் பார்ப்பது நல்லது” என்றேன். “முகப்பருவுக்குத்தானே சிகிச்சை பெற வந்தோம். அதற்கு எதற்கு ஸ்கேன்?” என்ற குழப்பத்துடன் அவர்கள் என்னைப் பார்த்தனர்; “காரணம் இருக்கிறது” என்றதும், அருகிலிருந்த ஸ்கேன் சென்டரில் ஸ்கேன் எடுத்து வந்தனர். அதில் சஹானாவுக்கு ‘பி.சி.ஓ.டி.’ (PCOD) எனும் நீர்க்கட்டிகள் இருப்பது உறுதியானது.