முனைவர் எஸ்.சாந்தினிபீ
தமிழகத்து கோயில் சிலைகள் திருட்டு விவகாரம் சிபிஐ வாசலைத் தட்டுகிறது. இன்றைக்கு நேற்றல்ல... நமது கோயில்களும் சிலைகளும் என்றைக்குத் தோன்றினவோ அன்றிலிருந்தே கோயில் கொள்ளைககளும் தொடங்கிவிட்டதாகச் சொல்கின்றன நமது கல்வெட்டுகள்!
மரத்தடியில் இருந்த கடவுள்களைப் பெரிய கோயில்களைக் கட்டி அதன் உள்ளே வைத்துப் பூட்டி, வகை வகையான ஆடை, ஆபரணங்களையும் அசையும் அசையா சொத்துகளையும் கடவுள்களுக்காகச் சேர்த்து வைத்த காலத்திலிருந்தே களவுகளும் தொடங்கிவிட்டன.
பல்லவர்கள் காலத்தில் கோயில் திருட்டுகள் நடக்கவில்லையா... அல்லது திருட்டுகள் கண்டுபிடிக்கப்படவில்லையா என்று தெரியவில்லை. ஆனால், சோழர் காலத்து கல்வெட்டுகள் நமக்குப் பல தகவல்களை அள்ளித் தருகின்றன.