ஒரு பொம்மலாட்டம் நடக்குது! - ஒட்டுண்ணிகளின் மர்மக் கதை

By காமதேனு

ஒருநாள் உங்கள் வீட்டுக் கதவை உடைத்துக் கொண்டு ஒருவர் உள்ளே நுழைகிறார். “ஏன் கதவை உடைத்தாய்?” என்று அவரைக் கேட்பதற்குள் அவர் உங்களை காபி கொண்டுவரச் சொல்கிறார். ஒய்யாரமாக உங்கள் வீட்டு சோபாவில் உட்கார்ந்துகொள்கிறார். உங்களை ஓடிப்போய் சரவணபவனில், நானும் பனீர் பட்டர் மசாலாவும் வாங்கிவரச் சொல்கிறார். நீங்களும் அவர் சொன்னதையெல்லாம் அப்படியே செய்கிறீர்கள். அது எல்லா விஷயங்களிலும் தொடர்கிறது. உங்கள் சம்பளப் பணத்தை அப்படியே அவரிடம் தந்துவிடுகிறீர்கள். உங்கள் வீட்டை அவர் பேருக்கு எழுதித் தந்துவிடுகிறீர்கள். கடைசியில் அந்த வீட்டை அவரிடம் ஒப்படைத்துவிட்டு நீங்களே வெளியேறிவிடுகிறீர்கள். இப்படியெல்லாம் நமக்கு நடந்தால் எப்படி இருக்கும்! நம்மால் கேள்வி கேட்கவோ எதிர்க்கவோ முடியாத வகையில் நம் சுயவுணர்வும் சுதந்திர இயக்கமும் இன்னொருவர் கட்டுப்பாட்டுக்குள் போனால் எப்படி இருக்கும்! வாழ்தலுக்கான போராட்டத்தில் தங்களைத் தக்கவைத்துக்கொள்வதற்குச் சில ஒட்டுண்ணிகள் பின்பற்றும் உத்தியும் இதுதான்.

சிலவகை ஒட்டுண்ணிகள் தாங்கள் எந்த உயிரினத்தின் உடலுக்குள் ஊடுருவியிருக்கின்றனவோ அந்த உயிரின் மூளைச் செயல்பாட்டையே மாற்றியமைக்கின்றன. வசியம் செய்யப்பட்டவர் மற்றவரின் கட்டுப்பாட்டுக்கு இணங்கி நடப்பதுபோல் அந்த உயிரினம் இயங்குகிறது. அதற்கென்று சுயவிருப்பம், சுதந்திரமான இயக்கம் ஏதும் கிடையாது. ஒட்டுண்ணி அதன் உடலில் வந்துசேர்ந்த பிறகு அதன் வாழ்க்கை, செயல்பாடுகள் முழுவதும் ஒட்டுண்ணிக்கே சமர்ப்பணம்.

டைனோகாம்பஸ் கோச்சினெல்லே என்ற அறிவியல் பெயருடைய குளவி தனது முட்டையைப் பொறிவண்டின் (Ladybird beetle) உடலுக்குள் இட்டுச்செல்கிறது. அந்த வண்டின் உடலுக்குள் முட்டை பொரிக்கிறது. முட்டையிலிருந்து வெளிவந்த லார்வா, வண்டின் ரத்தத்தையும் இன்னபிற உள்ளுறுப்புகளையும் உணவாக உட்கொள்ள ஆரம்பிக்கிறது. மிகக் கவனமாக, பொறிவண்டின் ஆதார உறுப்புகளை விட்டுவைக்கிறது. அந்த லார்வா உயிரோடு இருக்க வேண்டுமென்றால் வண்டும் உயிரோடு இருக்க வேண்டுமல்லவா! ஒரு கட்டத்தில் வண்டின் வயிற்றைத் துளைத்துக்கொண்டு வெளியில் வரும் லார்வா தன்னைச் சுற்றி ஒரு கூட்டை உருவாக்கிக்கொள்கிறது. அந்தக் கூட்டுப்புழுவால் தன்னைத் தற்காத்துக்கொள்ள முடியாது என்பதால் தனக்குக் காவலாக வண்டை நிற்க வைக்கிறது. ஏதோ தான் பெற்ற பிள்ளையைப் பாதுகாப்பதுபோல் அன்னந்தண்ணி இல்லாமல் அந்தக் கூட்டைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அதைக் காவல் காக்கும் அந்த வண்டு. ஏழு நாட்கள் கழித்துக் கூட்டுப்புழு முழு வளர்ச்சி பெற்று, கூட்டிலிருந்து குளவியாக வெளிவரும். அதுவரை அந்தப் பொறிவண்டு தாக்குப்பிடிக்குமானால் அதற்குப் பிறகு அது மீளக்கூடும். அதனை ஆட்கொண்ட வசியமும் அகன்றுவிடும். அதன் உள்ளுறுப்புகள் மறுபடியும் வளரும், அவற்றால் இனப்பெருக்கமும் செய்ய இயலும். பொறிவண்டின் மூளையைத் தொடாமலேயே அதைத் தனது இஷ்டத்துக்கு அந்த லார்வா ஆடவைப்பது ஆச்சரியம்தான். அந்த லார்வா சுரக்கும் வேதிப்பொருள்தான் அதற்குக் காரணம் என்று உயிரியலாளர்கள் நம்புகிறார்கள்.

அடுத்ததாக சுவர்க்கோழிகளின் (cricket) தற்கொலைப் பயணம்! குதிரைமுடிப் புழுக்களின் லார்வாக்களைக் கொசுக்களின் லார்வாக்கள் உண்கின்றன. கொசு லார்வா கொசுவாக உருமாற்றம் பெற்ற நிலையில் அவற்றைச் சுவர்க்கோழிகள் உண்கின்றன. இப்படியாகக் குதிரைமுடிப் புழுக்களின் லார்வாக்கள் சுவர்க்கோழிகளின் வயிற்றுக்குள் தஞ்சம் புகுகின்றன. அவற்றின் உடலுக்குள் பல அடி நீளத்துக்கு அந்தப் புழுக்கள் வளர்கின்றன. அவற்றின் பரிணாமத்தில் சுவர்க்கோழியின் உடல் ஒரு பகுதி மட்டுமே. வளர்ச்சி பெற்ற நிலையில் அந்தப் புழுக்கள் நீர்நிலைகளை அடைந்தாக வேண்டும். அந்தக் கட்டத்தில் சுவர்க்கோழிகள் கூட்டம் கூட்டமாக நீர்நிலைகளுக்குச் செல்கின்றன. அங்கு குதித்துத் தற்கொலை செய்துகொள்கின்றன. அதாவது, அவற்றை அங்கு குதிக்கும்படி குதிரைமுடிப் புழுக்கள் தூண்டுகின்றன. அங்கு சுவர்க்கோழியின் உடலிலிருந்து சுமார் ஒரு மீட்டர் நீளம் வரை உள்ள குதிரைமுடிப் புழு வெளிவருகிறது. நீர்நிலையில் இனப்பெருக்கம் செய்து முட்டையிடுகிறது. அந்த முட்டையிலிருந்து வெளிவரும் லார்வாவைக் கொசுக்களின் லார்வா உண்ண, மறுபடியும் அதே நிகழ்வுகள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE