முடிப் பிரச்சனைக்கு முடிவு கட்டலாம்!

By காமதேனு

வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்ப்பதற்கும் முடி உதிர்வதற்கும் தொடர்பு இருக்கிறது என்று சொன்னால் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதாகத்தான் நினைப்பீர்கள். ஆனால், அதுவும் சாத்தியமே! எப்படி?

என் மருத்துவ நண்பர்களில் ஒருவர் சருமநல மருத்துவர். அவர் சொன்ன சம்பவத்தை உங்களுக்குப் பகிர்ந்தால் அது புரியும். இல்லத்தரசி புனிதா ரொம்பவும் வசதியானவர். வீட்டில் நாய், பூனை, கிளி என ‘செல்லங்களை’ வளர்ப்பதில் பிரியம் கொண்டவர். அவருக்கு ஒருமுறை, தலைமுடி உதிரும் பிரச்சினை மாதக்கணக்கில் நீடித்தது. அலோபதி, ஹோமியோபதி, நேச்சுரோபதி, சித்தா எனச் சகலத்தையும் பார்த்துவிட்டார். அவருடைய தலையில் பூஞ்சை இருப்பதுதான் முடி உதிரக் காரணம் என்று எல்லோரும் கோரஸ் பாடினார்கள். ஆனால், அதிலிருந்து மீளத்தான் வழி சொல்லவில்லை. அவர் சிகிச்சை பெறும்போது மட்டும் முடி உதிர்வது நிற்பதும், சிகிச்சையை நிறுத்தியதும் மறுபடி வேதாளம் முதுகில் ஏறிக்கொள்வதுமாக நாட்கள் கடந்தன.

கடைசியாக, அவர் என் நண்பரைச் சந்தித்திருக்கிறார். அப்போது அவருடைய வளர்ப்புப் பூனைக்கும் சருமத்தில் பிரச்சினை. நண்பரின் மருத்துவமனைக்கு வரும் வழியில் விலங்கு நல மருத்துவரும் இருந்ததால், அங்கு பூனைக்குச் சிகிச்சை பெற்றுக்கொண்டு, அவருக்குச் சிகிச்சை எடுக்க வந்திருக்கிறார். அப்போதுதான் இத்தனை காலமும் புரிபடாது இருந்த புனிதாவின் புதிர் அவிழ்ந்தது. புனிதாவின் சரும நோயும் அவர் பூனைக்கு இருந்த சரும நோயும் ஒன்றுதான். புனிதா அந்தப் பூனையை மடியில் வைத்துக்கொண்டு முகம் உரசிக் கொஞ்சுவார் என்பதால், பூனையிடமிருந்து புனிதாவுக்கு அந்தச் சரும நோய் ஒட்டிக்கொண்டுவிட்டது. இந்தக் ‘கம்பசூத்திரத்தை’ என் நண்பர்தான் கண்டுபிடித்திருக்கிறார். எனவே புனிதாவிடம், “இந்தப் பூனையின் பிடியிலிருந்து விலகினால்தான் உங்கள் தலையில் இருக்கும் பூஞ்சை விலகும். அப்புறம் உங்கள் தலைமுடி உதிர்வது நிற்கும்!” என்று அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். அது உண்மையானதும், சந்தோஷம் தாளாமல், ஒரு ‘டாபர்மேனை’ என் நண்பருக்கு அன்பளிப்பாகத் தந்திருக்கிறார் புனிதா!

ஆக, முடி உதிரும் பிரச்சினைக்கு முடிவு கட்ட வேண்டுமானால், தலை சீவும் சீப்பிலிருந்து வளர்ப்புப் பிராணிகள் வரை கவனிக்க வேண்டும். அப்போதுதான் இதற்கு உண்மையான காரணம் தெரியும்; சரியான சிகிச்சை எடுக்க முடியும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE