திகில் கிளப்பும் திவாகரன்... அனல் பரப்பும் ஜெயானந்த்..! 

By காமதேனு

திகில் கிளப்பும் திவாகரன்... அனல் பரப்பும் ஜெயானந்த்..! 

அதிமுக-வுக்கு ஆதரவாக திடீர் காவடி தூக்கிய திவாகரன், இப்போது திமுக-வுக்கு ஆதரவாக அந்தர்பல்டி அடித்
திருக்கிறார். கடந்தவாரம் மன்னார்குடியில் மீடியாக்களிடம் பேசிய அவர், மருமகன் தினகரனோடு சேர்த்து அதிமுக-வையும் மானாங்கண்ணியாகப் போட்டுத் தாக்கினார்.  “குவித்து வைத்திருக்கும் பணத்தை வைத்து முதல்வராகி விடலாம் எனக் கனவு காண்கிறார் தினகரன். அதிமுக-வில் இப்ப ஒன்றரைக் கோடி தொண்டன் இருக்கிறதா சும்மா கப்சா விடுறாங்க” என்று  ‘அட்டாக்’கியவர், அடுத்ததாகப் பேசியதுதான் அகில உலகத் தரம். “கலைஞர் கருணாநிதியின் தியாகங்களை நாங்கள் மதிக்கிறோம். அவரது அருமை பெருமைகளைக் கடந்த காலங்களில் சிலர் திட்டமிட்டு மறைத்துவிட்டார்கள். திருப்பரங்குன்றத்திலும் திருவாரூரிலும் தாங்கள்தான் ஜெயிப்போம் என்று தினகரனும் அதிமுகவும் சொல்கிறார்கள். நான் சொல்கிறேன்... நாளைக்கே தேர்தல் வந்தாலும் திமுகதான் ஜெயிக்கும்” என்று திவாகரன் முழங்கியதைப் பார்த்து அக்கம் பக்கத்தில் நின்றவர்களே  கொஞ்சம்  ஜெர்க் ஆகிப் போனார்கள். இவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்க... இவரது அருமை புதல்வர் ஜெயானந்தோ அப்பாவின் அந்தரங்கத் திட்டம் புரியாமல், “திருவாரூரில் என்னை நிறுத்தினால் நான்தான் ஜெயிப்பேன்” என்று தன் பங்கிற்கு அனல்பரப்பிக் கொண்டிருக்கிறார். 

கொளுத்திப்போட்ட குருமூர்த்தி!

பாரதியார், `சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று பாடியதாகத்தான் நமக்கும் சொல்லிக் கொடுத்தார்கள், நாமும் நமது பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுத்தோம். ஆனால், இப்போது அதிலும் சர்ச்சை கிளம்பியிருக்கிறது. சர்ச்சையை கிளப்பியிருப்பவர் துக்ளக் ஆசிரியரும் வலதுசாரி சிந்தனையாளருமான ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி. 28.8.18-ம் தேதியிட்ட துக்ளக் இதழில், “உண்மையில் பாரதியார், `சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று எழுதவே இல்லை. ‘சாதி பெருமை இல்லை பாப்பா... அதில் தாழ்ச்சியுயர்ச்சி செய்தல் பாவம்...’ என்றுதான் அவர் நடத்திய ஞானபாநு பத்திரிகையில் (1915 மார்ச், பக்கம்: 287-88) எழுதினார். ஆனால், அது 1917-ல் வெளியான நெல்லையப்பர் பதிப்பில், ‘சாதிகளில்லையடி பாப்பா... குலத் தாழ்ச்சியுயர்ச்சி சொல்லல் பாவம்...’ என்று மாறிவிட்டது.  பாரதியாரை ஆய்வுசெய்த சீனி.விஸ்வநாதனின், ‘காலவரிசையில் பாரதி படைப்புகள்’ 9-வது தொகுதியின் 148-ம் பக்கத்தில் இந்தக் தகவல்களைப் பார்க்கலாம்” என்று குறிப்பிட்டிருக்கிறார். குருமூர்த்தி இப்படிக் கொளுத்திப் போட... அவரை விட்டுவிட்டு, கம்யூனிஸ்ட்களும் திராவிட இயக்கத்தினரும் பாரதியை மையமாகக் கொண்டு சமூக வலைதளங்களில் காரசார விவாதம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE