கழுத்துவலியும் காணாமல் போகும்!

By காமதேனு

கழுத்துவலிக்குப் பல காரணங்கள் பார்த்தோம். அந்தக் காரணங்களை அகற்றினால் போதும், கழுத்துவலி காணாமல் போகும். சாதாரண வலி மாத்திரைகளுக்குக் கழுத்துவலி கட்டுப்படவில்லை என்றால், குடும்ப மருத்துவரைப் பாருங்கள். கழுத்துக்கு எக்ஸ்-ரே எடுங்கள். கைக்கும் வலி பரவுகிறது என்றால், சி.டி.ஸ்கேன்/எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எடுப்பது அவசியம். 40 வயதைக் கடந்தவர்களுக்கு இ.சி.ஜி.யும் தேவை. காரணம் தெரிந்து சிகிச்சை எடுத்தால் சீக்கிரம் இது சரியாகும்.

‘முறையான’ சிகிச்சை எது?

வலி ஊசிகள்/மாத்திரைகள் அவசரத்துக்கு உதவும். ஆனால், அவை அடிக்கடி வேண்டாம். அப்புறம் சிறுநீரகம் கோபித்துக்கொள்ளும்! கழுத்துவலிக்கு ‘பிசியோதெரபி’தான் சிறந்த சிகிச்சை. அதில் பல விதம் உண்டு. எலும்புத் தேய்மானம் உள்ளவர்களுக்கு நுண்ணொலி சிகிச்சை (Ultrasonic therapy) உதவும். வலிக்கின்ற இடத்தில் ‘மின் ஒத்தடம்’ கொடுக்கும் சிகிச்சை இது. வலி உடனே கட்டுப்படும். ஜவ்வுப் பிரச்சினை ‘உடன்பிறப்பாக’ இருந்தால், டிரா
க்ஷனும் ‘டென்ஸ்’ சிகிச்சையும் (TENS therapy) தேவைப்படும். மோசமான சாலைகளில் பயணம் செய்பவர்கள் கழுத்தில் ‘காலர்’ அணிவது அவசியம்.

திறந்தவெளியில் தீயை அணைப்பதற்குத் தண்ணீர் இருந்தால் போதாது; வீசும் காற்றும் முக்கியம். அதுமாதிரி, இதுவரை சொன்ன  சிகிச்சைகள் கழுத்துவலியைக் கட்டுப்படுத்துமே தவிர, அது மறுபடியும் வருவதைத் தடுக்காது. அதற்குக் கழுத்துப் பயிற்சிகள்தான் (Isometric neck exercises) உதவும். கழுத்து வலிக்கு ‘முறையான’ சிகிச்சை இதுதான். இயன்முறை மருத்துவரின் ஆலோசனைப்படி இவற்றைச் சோம்பல்படாமல் செய்தவர்கள் கழுத்துவலிக்கு ‘டாட்டா’ சொல்லியிருக்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE