அப்பா சைக்கிள் மிதித்த வலி பிள்ளைகளுக்குத் தெரியாது!

By காமதேனு

அப்பாவின் சைக்கிள் கைப்பிடியில் மாட்டப்பட்ட சிறுகூடையில் அமர்ந்திருக்கும் அந்தச் சிறுவனுக்கு எல்லோரையும் போல அப்பாதான் ஹீரோ. முன்னே பிள்ளையை உட்கார வைத்து சைக்கிளை மிதித்தபடி செல்லும் அப்பாவின் தோளில் ஒரு துண்டு இருக்கும். கரைவேட்டி. மன்னார்குடியின் தெருக்களில் அப்பாவின் சைக்கிள் செல்லும்போது எதிர்ப்படுபவர்கள் அப்பாவைப் பார்த்து ‘வணக்கம் தலைவரே’ என்று சொல்வதைப் பார்த்து அந்தச் சிறுவனுக்கு அளவில்லாத சந்தோஷம் அப்போது. இத்தனைக்கும் அவனுடைய அப்பாவுக்குச் சமூகத்தில் எந்த உயர்ந்த அந்தஸ்தும் கிடையாது. சொந்தமாக ஒரு சதுர அடி நிலம்கூட கிடையாது. வீடும் புறம்போக்கில், பாமணி ஆற்றங்கரையில். அலுவலகத்தில் கடைநிலை ஊழியர். அலுவலகத்துக்காக எல்லா வேலைகளையும் செய்துதரும் அலுவலக உதவியாளர் பணி. 

இப்படி எல்லா நிலையிலும் அதிகாரமோ பணபலமோ செல்வாக்கோ இல்லாவிட்டாலும், அலுவலக உயர் அதிகாரிகளில் தொடங்கி ஊரில் உள்ள பெரிய மனிதர்கள் வரை அப்பாவைப் பார்த்தால் ‘வாங்க தலைவரே, வணக்கம் தலைவரே’ என்று சொல்வார்கள். இதெல்லாம் பிற்பாடுதான் அந்தச் சிறுவனுக்குத் தெரிந்தது. என்றாலும் முன்சீட்டில் அமர்ந்திருக்கும் அவன், தன் அப்பாவுக்குக் கிடைக்கும் மரியாதையைத் தனக்குக் கிடைத்த மரியாதையாகக் கற்பனை செய்திருப்பான்போல. 
அதனால்தான் அவ்வளவு சந்தோஷம்.

சைக்கிளுக்கு முன்னே ஒரு கழுகு பொம்மை இருக்கும். சைக்கிளின் பக்கவாட்டில் சங்கிலிப் பட்டையின் மேலே அவனுடைய அண்ணனின் பெயர் கறுப்பு – சிவப்பில் எழுதப்பட்டிருக்கும். தேர்தல் சமயம் என்றாலோ கட்சி மாநாடு, கூட்டங்கள் என்றாலோ அதே சைக்கிளில் முன்பக்கம் கறுப்பு சிவப்பு கொடியைச் செருகி அப்பா அழைத்துச்செல்வார். மன்னார்குடியில் திராவிட இயக்கங்களைப் போல கம்யூனிஸ இயக்கங்களுக்கும் செல்வாக்கு அதிகம் என்றாலும் திராவிட இயக்கக் கூட்டங்களுக்குத்தான் அப்பா அழைத்துச் செல்வார். அப்பாவுடன் முன்வரிசையில் அமர்ந்து பார்த்த கலைஞர் கூட்டங்கள் ஏராளம்.

‘மன்னை’ என்று அழைக்கப்படும் மன்னை நாராயணசாமி அருகில் உட்கார்ந்திருக்க, மேடையில் கலைஞர் பேசும்போது தனக்கும் மன்னைக்கும் உள்ள உறவைப் பற்றி நெகிழ்ச்சியுடன் பேசியது அவனுக்கு இன்றும் நினைவில் இருக்கிறது. ‘மன்னையை நான் முந்திக்கொள்வேன்’ என்று கலைஞரும் ‘கலைஞரை நான் முந்திக்கொள்வேன்’ என்று மன்னையும் மாறி மாறிப் பேசும்போது ஒரு கட்சிக்குள் எப்படியெல்லாம் நட்பு உருவாகி ஒரு தொன்ம நிலையை அடைகிறது என்பதைப் புரிந்துகொள்ளும் வயது அந்தச் சிறுவனுக்கு அப்போது இல்லை. கடைசியில் மன்னை முந்திக்கொண்டார் என்பது வேறு விஷயம். இப்படி ஒவ்வொரு ஊரிலும் ஒரு நண்பர் கலைஞருக்கு இருப்பார். அந்த மேடையிலும் இப்படிப்பட்ட காட்சிகள் அரங்கேறும் என்று பின்னாளில்தான் அந்தச் சிறுவனுக்குத் தெரிந்தது. 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE