அந்தப் பெரியவர்… அப்பா மாதிரி- செம்போடை தங்க.நாகேந்திரன்

By காமதேனு

விடிந்தும் விடியாத காலை ஆறு மணிக்கு எழுந்ததும் மனைவி இந்திரா வீட்டில் இல்லாத வெறுமை முகத்தில் அறைந்தது. நேற்று மாலைதான் அம்மா வீட்டுக்குக் கிளம்பினாள். சோம்பல் முறித்தவாறு கேட்டில் திணிக்கப்பட்டிருந்த செய்தித்தாளை எடுக்க வந்த நான், தெருமுனையில் ராமசாமியைப் பார்த்ததும் எரிச்சலானேன். என் வீட்டையே உற்றுப்பார்த்தபடி வேகமாய் வந்துகொண்டிருந்தார். என்னைப் பார்த்திருப்பாரோ, பார்த்திருந்தாலும் பரவாயி்ல்லை....இன்று நான் கதவைத் திறக்கப் போவதில்லை. இயற்கையாய் என்னுள் அமைந்துவிட்ட மனிதாபிமானத்தையும் இரக்ககுணத்தையும் இப்படியா நோகடிப்பது? வெறுத்துப்போனேன். நேற்று மாலை ரயில்வே ஸ்டேசனில்கூட பத்துரூபாயை அவருக்குக் கொடுத்துவிட்டுத்தான் வந்தேன். அப்படியும் இன்று காலையிலேயே வீட்டுக்கு வருகிறார் என்றால், கடுப்பு வருமா வராதா?

ராமசாமியை நான் ஆறு மாதங்களுக்கு முன்பு பார்த்தது நீலப்பாடியில் உள்ள ஒரு டீக்கடையில். “சாமி பசிக்குது ஒரு டீ வாங்கிக்கொடுங்க” என்றபடி நின்ற முதியவரைப் பார்த்ததும் எனக்குப் பரிதாபம் மேலிட்டது. சாப்பிட்டு பல நாள் இருக்கும் போல் இருந்தது. கன்னங்கள் உள்வாங்கியிருக்க கண்கள் இடுங்கிப்போய் இருந்தன. “மாஸ்டர் பெரியவருக்கு ஒரு டீ கொடுங்க...” என்றேன்....“வடை சாப்பிடுறீங்களா?“ என்று கேட்டு அவர் பதில் சொல்வதற்குள், ஸ்டாலில் இருந்து ஒரு வடையை எடுத்து அவரிடம் நீட்டினேன். தயக்கப்பட்டார். வற்புறுத்திக் கொடுத்ததும் வாங்கிக்கொண்டார். வடையைத் தின்றுவிட்டு டீயைக் குடித்துவிட்டு என்னை நன்றியோடு பார்த்தார். இருகைகளையும் மார்புக்கு நேராக வைத்து கும்பிட்டுவிட்டு நடந்த அவர், அப்படியே என் அப்பாவின் சாயலி்ல் இருந்தார்!

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எங்களை வேதனையில் தள்ளிவிட்டு மறைந்துபோன அப்பா, டீக்கோ வடைக்கோ யாரிடமும் கையேந்தவில்லை என்றாலும் வறுமையில்தான் அவரது காலம் கழிந்தது. என்னை டீச்சர் ட்ரெயினிங் படிக்க வைப்பதற்குள் அவர் பட்ட பாடு... அப்பப்பா! ஆனால், பயி்ற்சி முடிந்து நான் வேலையில் சேர்வதற்குள் அவர் போய்விட்டார்.

ஒவ்வொரு மாதமும் இறுதிநாளில் ஏடிஎம் இயந்திரத்தில் கார்டை சொருகிவிட்டு எடுக்கும் கரன்சி என் அப்பாவின் வியர்வை. அதில் ஒரு டீகூட குடிக்காமல் அவர் போனதுதான் இன்னமும் என் மனதை உறுத்தும் விஷயம். அப்பா இறந்தபோது நாங்கள் அடுத்தவேளை சாப்பாட்டிற்கு என்ன செய்வது என்று தினந்தோறும் யோசிப்போம். அம்மா நூறுநாள் வேலைக்குப் போகும் பணத்தில்தான் ஜீவனம் நடந்தது. நான் பேப்பர் போடுவது, ரைஸ்மில்லிற்கு லோடுமேன் வேலைக்குப் போவது என்று ஏதோ என்னால் ஆனதைப் பார்த்துவந்தேன். ஆனால், அடுத்த ஆண்டே எனக்கு ஆசிரியர் வேலை கிடைத்துவிட, மனைவியும் ஆசிரியையாகவே அமைந்தாள். இதில் அடுத்த சோகம் என்னவென்றால் அம்மாவும் சில வருடங்களிலேயே காலமாகிவிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE