தமிழ் நாடு என்று பெயர் வைப்பதற்காகப் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதற்காக தியாகி சங்கரலிங்கனார் 76 நாட்கள் உண்ணாவிரதமிருந்து உயிரைவிட்டார்.
சென்னை மாகாணம் (Madras State) என்ற பெயரை ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றி ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. பொன்விழா கொண்டாடும் இந்தத் தருணத்தில் ‘தமிழ்நாடு’ உருவான வரலாறையும் நினைவுகூர வேண்டியது அவசியம். பல்வேறு போராட்டங்கள், பல தீர்மானங்களுக்கு அப்பால்தான் இந்தப் பெயர் மாற்றம் நிகழ்ந்தது.
சென்னை மாகாணத்தைத் தமிழ்நாடு என்று மாற்ற வேண்டும் என்ற கோஷத்தை முதலில் உச்சரித்தவர் தியாகி சங்கரலிங்கனார். ஜூலை 27, 1956-ல் விருதுநகர் தேசபந்து திடலில் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றச் சொல்லி தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார். அப்போது அண்ணா, ம.பொ.சி., ஜீவா, கக்கன் போன்றவர்கள் தியாகி சங்கரலிங்கனாரைச் சந்தித்து, உண்ணா நோன்பைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால், அவர் தம் உண்ணாவிரதத்தில் உறுதியாக இருந்தார். 76 நாட்கள் கடந்த நிலையில், அக்டோபர் 13, 1956-ல் உயிர் துறந்தார் சங்கரலிங்கனார். அதன் பிறகு தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம் வேண்டுமென்று உறுதிகொண்டார் அண்ணா.
திமுக சட்டமன்றத்திற்குள் நுழைந்ததுமே, மே 7, 1957-ல் இதற்கான தீர்மானத்தையும் கொண்டு வந்தார் அண்ணா. தீர்மானத்துக்கு ஆதரவாக 42 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. 127 வாக்குகள் எதிராகப் பதிவானது. திமுக-வின் முதல் தீர்மானமே தோல்வியில் முடிந்தது. ஆனாலும் ‘தமிழ்நாடு’ பெயர் மாற்றக் கோரிக்கையைத் திமுக விடவில்லை. சோசலிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சின்னதுரை, ஜனவரி 30, 1961-ல் தமிழ்நாடு என்று பெயர் மாற்றும் தீர்மானத்தை மீண்டும் கொண்டு வந்தார். இதற்கு மா.பொ.சி. தலைமையிலான தமிழரசுக் கட்சியினர் ஆதரவு தெரிவித்து பல்வேறு அடையாளப் போராட்டங்களை நடத்தினர். அப்படியும் எந்தப் பயனும் ஏற்படவில்லை. முதல்வர் காமராஜர், அரசுக் கடிதப் போக்குவரத்தில் மட்டும் தமிழ்நாடு என்று குறிப்பிடலாம் என்று சம்மதித்தார். இந்த முடிவை யாரும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.