வரிசை தொடங்கிய இடமும் முடிந்த இடமும் ஒன்று. நம்பர் 498 பஸ்ஸுக்கு நான் மட்டுமே தனியாகக் காத்து நின்றேன். சாம்பல் நிறப் பகல். கனடாவில் தற்காலிகமாக நான் தங்கியிருந்த இடம் மோசமானது. பஸ் வுட்வார்ட் அவென்யூ வழியாகப் போகும்போது ஏமாற்றுக்காரப் பேர்வழிகள் எல்லாம் ஏறுவார்கள், இறங்குவார்கள். அதையெல்லாம் பார்த்தால் முடியுமா? கோப்பை கழுவும் வேலையிலும் பார்க்க உயர்ந்த வேலை எனக்குக் கிடைத்ததில்லை. நாலாவது வேலையும் போய்விட்டது. என்னுடைய நண்பருக்கு வேண்டிய ஒருவருக்குத் தெரிந்த இன்னொருவர் என்னை நேர்முகத் தேர்வுக்கு வரச் சொல்லியிருந்தார். நல்ல வேலை, இரண்டு மடங்கு சம்பளம் என்றார்கள். சொன்ன நேரத்துக்குள் நான் போய்ச்சேர வேண்டும். அதுதான் முக்கியம். எனக்காக அவர் காத்திருக்க மாட்டார்.
பஸ்ஸில் இதே பாதையில் பலமுறை போயிருக்கிறேன். குறித்த நேரத்தில் பஸ் இலக்கை அடைந்தால், அது அந்தந்தப் பயணிகளின் கூட்டுமொத்த அதிர்ஷ்டம். ஆகவே நேரம் பிந்துவதற்கு அதிகம் வாய்ப்பு இருந்தது. போவதற்கு இரண்டு டொலர் கட்டணம், திரும்புவதற்கு இரண்டு டொலர் என்பது கணக்கு. என்னுடைய மதிய உணவுக்காக நான் சேமித்து வைத்த காசு இது. வேலை முக்கியமா மதிய உணவு முக்கியமா என மனதுக்குள் விவாதம் நடந்தது. தூரத்தில், திருப்பத்தில் சாம்பல் பச்சை வர்ண பஸ் வருவது தெரிந்தது. பிரார்த்தனையில் பாதி பலித்துவிட்டது. கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். பஸ்ஸில் அடிக்கடி சின்னச் சண்டைகள் உண்டாகி அதனால் தாமதம் ஏற்படுவது வழக்கம். எல்லாம் பஸ் சாரதியின் சாமர்த்தியத்தில் தங்கியிருக்கிறது.
பஸ் முக்கால்வாசி நிரம்பியிருந்தது. இரண்டு டொலரை பஸ் சாரதியிடம் தந்துவிட்டு வசதியான இடம் பிடித்து அமர்ந்தேன். எனக்குப் பக்கத்தில் இருந்தவர் கடுதாசிக் குவளை காபியைக் குடிக்காமல் கையிலே பிடித்து நல்ல சந்தர்ப்பத்துக்காக அதையே பார்த்துக்கொண்டிருந்தார்.
அவர் கைவிரல்களில் வரிசையாக வெள்ளி மோதிரங்கள். மற்ற பக்க இளைஞன் இரண்டு பெருவிரல்களாலும் செல்பேசியில் படுவேகமாகக் குறுஞ்செய்திகள் அனுப்பியவண்ணம் இருந்தான். அதே சமயம் புதுச் செய்திகள் ‘டிங் டிங்’ என வந்து விழுந்தன. என்னுடைய புகழ்பற்றி நேர்முகத்தில் என்னவென்ன சொல்லலாம், என்னவென்ன சொல்லக் கூடாது என்பது பற்றி திட்டவட்டமாக யோசித்து வைத்திருந்தேன்.
மறுபடியும் மனதுக்குள் ஒத்திகை பார்த்தேன். இதிலே ஒரு தந்திரம் இருக்கிறது. பெரிய கேள்விகளுக்கு சின்னப் பதில் சொல்லவேண்டும்; சின்னக் கேள்விகளுக்குப் பெரிய பதில் தேவை. ஒவ்வொரு தடவையும் தவறாமல் கேட்கப்படும் கேள்வி `எதற்காகக் கடைசி வேலையை விட்டீர்கள்?’ என்பதுதான். ‘16 கோப்பைகளை உடைத்தேன்’ என்று சொல்ல முடியுமா? அமோகமான கற்பனை வளம்தான் என்னைக் காப்பாற்றும்.