‘மத'வெறி பாஜக நாட்டுக்கு ஆபத்து: தெய்வ நம்பிக்கையை மத நம்பிக்கையாக திரிப்பதா? - அண்ணாமலைக்கு ஜெயக்குமார் கண்டனம்

By KU BUREAU

சென்னை: ஒருவரின் தெய்வ நம்பிக்கையை மத நம்பிக்கையாக திரித்து, மதத்தலைவராக பாஜக மாற்றி வருவதாகவும், மதவெறி கொண்ட யானையை விட ‘மத’வெறி பிடித்துள்ள பாஜக நாட்டுக்கு ஆபத்தானது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மறைந்த முன்னாள் தலைவர் ஜெயலலிதாவின் முந்தைய செயல்பாடுகள், பேச்சுக்கள் இவற்றை குறிப்பிட்டு, அவரை இந்துத்துவா தலைவர் என்று தெரிவித்தார். இந்தகருத்துக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து, ஜெயலலிதா குறித்து இதே கருத்துகள் பரப்பப்பட்டு வரும் நிலையில், இவற்றுக்கு பதிலளித்து, ஜெயக்குமார் நேற்று தனது சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: ராமர் கோவில், பாபர் மசூதி விவகாரத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இரு மதங்களுக்கும் நடுநிலையாகவே தனது நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்துள்ளார். அதுதான் ஜெயலலிதாவின் அன்றைய உண்மையான நிலைப்பாடு.

அந்த செய்தித்தாளில் வந்தது, இந்த செய்தித்தாளில் வந்தது என அறமற்ற கருத்துக்களை பேசுவது அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது. அவர் இன்று இல்லைஎன்றவுடன் அவதூறு பரப்பி அவரை களங்கப்படுத்த நினைப்பவர்கள் காணாமல் போவார்கள்.

ஒருவரது தெய்வநம்பிக்கையை மத நம்பிக்கையாக திரித்து மத தலைவராக மாற்ற நினைப்பதுதான் பாஜகவின் எண்ணம். தமிழன் என்ற ஒரே காரணத்துக்காக ஒடிசாவில் வளரக்கூடாது என்று இனத்தை வைத்து அடையாளப்படுத்தி பிளவுபடுத்த நினைப்பதும், மதங்கள் கடந்த சமூக நீதி காத்த தலைவரை ஒரு மதத்தலைவர் எனக் கூறி மதத்தால் பிளவுபடுத்த நினைப்பதும்தான் பாஜகவின் கொடூர கொள்கை.

தங்கள் சாதனைகளை தங்கள்தலைவர்களை பற்றி பேச முடியாமல் ஜெயலலிதா மீது அவதூறு பரப்பி அண்ணாமலை, தமிழிசை போன்றோர் விளம்பரம் தேடும் முயற்சி வீணாகும் தவிர விவாதம் ஆகாது. முல்லை பெரியாறு, மேகேதாட்டு - காவிரி, பாலாறு விவகாரம் என தமிழகத்தைச் சுற்றி மும்முனைகளிலும் இருந்துதமிழ் மண்ணுக்கு பேராபத்து நேர உள்ளது.

இதில் இருந்து திசை திருப்பி திமுக அரசைக் காப்பாற்றவும், தங்கள் டெல்லி ஓனர்களை நோக்கிஎந்த கேள்வியும் வரக்கூடாது என்பதற்காகவும், தான் ஒரு ‘ப்ரவுடு கன்னடிகா’ என்பதற்காகவும் இந்த அவதூறை அண்ணாமலை கையில் எடுத்துள்ளார்.

மதவெறி கொண்ட யானையை விட ‘மத’ வெறி பிடித்துள்ள பாஜக நாட்டுக்கு ஆபத்தானது என்பது அண்ணாமலை போன்றோரின் பேச்சுக்களில் இருந்து உணர முடிகிறது.

ஒற்றுமையும் ஒருமைப்பாடும் மிக்க தேசத்தை துண்டாட நினைப்பதை விட்டுவிட்டு, மக்கள் பிரச்சினைகளை பேசுவதே நாட்டின் நலம் என்பதை எத்தனை ஜென்மங்கள் கழித்து இந்த பாஜக உணரப்போகிறதோ, தமிழ் மக்களின் மனங்களை வென்ற ஜெயலலிதாவின் புகழ் என்றும் இந்த மண்ணில் நிலைத்து நிற்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE