இரவை நோக்கித் துரத்தப்படும் விலங்குகள்... ஆய்வுகள் சொல்லும் அதிர்ச்சித் தகவல்கள்!

By காமதேனு

சென்னை போன்ற நகரங்களில் இன்னும் கட்டிடம் ஏதும் கட்டப்படாமல் சிறிய திடல் ஒன்று தென்பட்டால், அங்கே ஒரே நேரத்தில் பல குழுக்கள் கிரிக்கெட் விளையாடுவதை நம்மால் பார்க்க முடியும். இந்தக் குழுவின் பந்தை அந்தக் குழுவின் ஃபீல்டர் எடுத்துப்போடுவதை சகஜமாகக் காணலாம். வெளியாட்களுக்கு யார் எந்தக் குழு என்றே தெரியாது. அந்தத் திடலுக்கு ஒரு சண்டியர் கூட்டம் கிரிக்கெட் விளையாட வருகிறது என்றால் என்ன ஆகும்? சின்னப் பையன்களும், பிரச்சினை ஏதும் வேண்டாம் என்று  நினைப்பவர்களும் ஒதுங்கிக்கொள்வார்கள்.

சண்டியர்கள் வராத நேரத்தில் மற்றவர்கள் அங்கு வந்து விளையாடுவார்கள். அந்தத் திடலை நம் பூமியாகக் கற்பனை செய்துபாருங்கள். மனிதர்கள் என்ற சண்டியர்கள் மற்ற உயிரினங்களுக்கு, முக்கியமாகப் பாலூட்டிகளுக்கு அச்சம் ஏற்படுத்தி, அவற்றின் இயல்பான பழக்கங்களையே மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான ஆய்வொன்றின்படி, மனிதர்களின் குறுக்கீட்டுக்கு அஞ்சிப் பல்வேறு பாலூட்டி விலங்குகள் இரவுநேர விலங்குகளாகிக்கொண்டிருக்கின்றன.

பகலில் ஓய்வெடுத்துவிட்டு இரவில் சுறுசுறுப்பாக இரைதேடி உண்ணும் விலங்குகளுக்கு இரவாடிகள் (nocturnal animals) என்றும், இரவில் ஓய்வெடுத்துவிட்டுப் பகலில் இரைதேடுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் உயிரினங்களுக்குப் பகலாடிகள் (diurnal animals) என்றும் பெயர். இன்னும் வெவ்வேறு நேரத்துக்குத் தகுந்தவாறு பலவகைப் பிரிவுகள் இருக்கின்றன. இப்படிச் செயல்படும் நேரத்தை உயிரினங்கள் தேர்ந்தெடுப்பதற்கு உணவு, உறைவிடம், பாதுகாப்பு என்று பல்வேறு காரணிகள் உண்டு. பல லட்சம் ஆண்டுகள் பரிணாமத்தின் விளைவாக இப்படிப்பட்ட பழக்கங்கள் உயிரினங்களுக்கு உருவாகும். ஆனால், மனித இனத்தின் வருகைக்குப் பிறகு, இன்னும் துல்லியமாகச் சொல்வதென்றால் நவீன யுகத்தின் வருகைக்குப் பிறகு, அந்த விலங்கினங்களில் ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. மனித ஆதிக்கத்தால் உணவு, உறைவிட இழப்பு ஏற்பட்டு விலங்கினங்கள் அழிந்துபோவது, வேற்றிடங்களுக்குத் துரத்தப்படுவது போன்ற நிகழ்வுகளை நாம் கண்டுவருகிறோம். அதன் தொடர்ச்சியாக இப்போது விலங்குகளின் காலம் சார்ந்த பழக்கவழக்கங்கள் மாறிவருவதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

உலகெங்கும் ஆறு கண்டங்களில், 62 விலங்குகளை ஆராய்ந்து பார்த்த அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் குழுவினர்தான் இந்த முடிவை வெளியிட்டுள்ளனர். இரவு நேரத்தில் விலங்குகளின் நடமாட்டம் முன்பைவிட 1.36 மடங்கு அதிகரித்திருக்கிறது என்கிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE