“மொதக் குழந்தையே பொட்டைப் புள்ளையா? இப்பயிருந்தே நாலு பணம் காசு சேர்க்க ஆரம்பிச்சுக்க. இல்லேன்னா பின்னாலே ரொம்பக் கஷ்டப்படுவே..!” தாய் பாத்திமா சொன்னதும் பொசுக்கென்று போயிற்று முகமது அலிக்கு.
மாலைநேரத் தொழுகைக்குப் பாங்கு சொல்ல சில நிமிடங்களே இருந்தன. வீட்டின் ஒரு மூலையில் துணிகளை விரித்து, தொழுகைக்காகத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டிருந்த பாத்திமா, ‘நல்ல’ வார்த்தைகளைச் சொல்லுவாள் என்றுதான் எதிர்பார்த்து விஷயத்தைச் சொன்னான். ஆனால், வழக்கம்போல் மகிழ்ச்சியோ வருத்தமோ எதுவுமற்ற பாவனையில் அவள் சொன்ன பதில் சற்று ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் தந்தது.
தொழுகையை முடித்துக்கொண்டு மருத்துவமனையின் பிரசவ வார்டுக்குள் நுழைந்தபோது, அவனுடைய மாமியார் மூன்றாவது படுக்கையின் அருகே போடப்பட்டிருந்த தொட்டிலருகே நின்றுகொண்டிருந்தாள். அவனைப் பார்த்தவுடன் தனது முக்காட்டைப் போர்த்திக்கொண்டு, “புள்ள தூங்குது...” என்றாள்.
ரோஜாக் குவியலைப் போலத் தூங்கிக்கொண்டிருந்தது குழந்தை. ரகமத்துன்னிசாவைப் போல சிவந்த நிறம். பாத்திமாவைப் போலமுகச்சாயல்.