ரெண்டுங்கெட்டான் வயசுப் பையன்களின் சாகசத்தை வைத்துப் பொங்கிய ‘கோலி சோடா’ பார்முலாவை வைத்துக்கொண்டு, சீசன் 2-வாக தயாரிக்கப்பட்டதுதான் ‘கோலி சோடா 2’. ரெண்டாவது சோடாவும் பொங்கத்தான் செய்கிறது. ஆனால், முதலின் விறுவிறுப்பு?
நேர்மையான ஆட்டோ டிரைவரான சிவா, ஒரு தாதாவின் அடியாளான மாறன், பரோட்டோ கடையில் வேலை பார்க்கும் இளைஞன் இன்பா. மூவரும் வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்குப் போகத் துடிக்கும் இளைஞர்கள். இவர் களை இணைக்கும் புள்ளிதான் சமுத்திரக் கனி. இவர்களின் கனவுக்கு கவுன்சிலர், தாதா, சாதிக்கட்சித் தலைவர் வாயிலா கப் பிரச்சினை வருகிறது. அந்தப் பிரச்சி னையை எதிர்கொண்டு, லட்சியத்தில் மூன்று இளைஞர்களும் வெல்கிறார்களா என்பதுதான் மீதிக்கதை.
தொடக்கக் காட்சியிலேயே கம்பீரமான போலீஸ் அதிகாரியாக வருகிறார் கௌதம் மேனன். அவர் சமுத்திரக்கனியிடம் விசாரிக்கிற தொனி, பேசும் வசனம் எல்லாம் வேற லெவல்.
‘அறிவுரை’ நடிகராகவே மாறிவிட்டார் சமுத்திரக்கனி. எனினும், அவரது அரசி யல் விமர்சனங்கள் கைத்தட்டல்களை அள்ளுகின்றன. “ச்சே... வெறும் 50 ஆயிரத்துக்குக்கூட நான் பெறமாட்டேன் போலயே” என்று சலித்துக்கொள்ளும் இளைஞனிடம், “டேய் இன்னைக்கு உன் உசிரோட மதிப்பு 15 லட்சம், வெளி நாட்டுல இருந்து கறுப்புப் பணத்தை எல்லாம் மீட்டுக்கொண்டுவந்திட்டா” என்பது அவற்றுள் ஒன்று.
படத்தில் சுத்தமாக லாஜிக்கே இல்லை. மூன்றே மூன்று விடலைகள் பெரிய ரவுடிக் கும்பலைப் பல முறை போட்டுத் தாக்குகிறார்கள். முதல் படத்தில் இருந்த நம்பகத்தன்மை இதில் இல்லையே, டைரக்டர் சார்.
காதலுக்கு நடுவே சாதித் தலைவர்கள் புகுந்து, பெற்ற தாய்க்கும் அதிகமாக அந்தப் பெண் மீது ‘உரிமை’ எடுத்துக்கொள்வதைக் காட்சிப் படுத்திய விதம் சிறப்பு.
பரத் சீனி, இசக்கி, வினோத் மூன்று பேரும் இளமைத் துடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். தாதாவாக வருகிற மலையாள நடிகர் செம்பியன் வினோத் ஜோஸ், கவுன்சிலராக வருகிற சரவணன் சுப்பையா இருவரும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு வலு சேர்க்கிறார்கள். நாயகிகள் கிருஷ்ணா கயூப், சுபிக் ஷாவுக்குப் பெரிதாக வேலையில்லை. ரோகிணி, ரேகா போன்ற சீனியர் நடிகைகள்... இருக்கிறார்கள், அவ்வளவுதான்!
‘பொண்டாட்டி நீ’ பாடல் தியேட்டருக்கு வெளியிலும் நினைவில் நிற்கிறது. பின்னணி இசை வழியே கை கொடுத்திருக்கிறார் அச்சு ராஜமணி.
மூன்று இளைஞர்களது தனித்தனியான கதையையும் பிசிறுதட்டாமல் காட்டியதில் தீபக்கின் படத்தொகுப்புக்கு முக்கியப் பங்கு.
இயக்குநர் விஜய் மில்டன், ஒளிப்பதிவாளராகக் கூடுதல் ஜொலிப்பு. அதை திரைக்கதையிலும் காட்டியிருக்கலாம். முதல் பாதியில் உருவான எதிர்பார்ப்புக்கு இரண்டாம் பாதியால் ஈடுகொடுக்க முடியவில்லை.