பிரதமர் மோடியின் தியான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்: திமுக சார்பில் குமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

By KU BUREAU

நாகர்கோவில்/சென்னை: பிரதமர் மோடி கன்னியாகுமரியில் தியானம் மேற்கொள்ள வழங்கியஅனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக வழக்கறிஞர் அணி சார்பில், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

குமரி விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடி இன்று முதல்3 நாட்கள் தியானம் மேற்கொள்கிறார். இந்நிலையில், திமுக மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஜோசப்ராஜ் தலைமையிலான கட்சியினர், மாவட்ட ஆட்சியர் தரிடம் நேற்றுமனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

ஜூன் 1-ம் தேதி 7-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குமரி விவேகானந்தர் மண்டபத்தில் மே 30 (இன்று) முதல் பிரதமர் மோடி தியானம் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வராணசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி, பாஜக வெற்றிபெறவேண்டும் என்ற நோக்கிலும், வாக்காளர்களைக் கவர்வதற்காகவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது. இதுபோன்ற தேவையற்ற விளம்பரத்தால், பொதுமக்களுக்கும், அரசுக்கும் பெரும் இழப்பு ஏற்படுகிறது.

கோடை விடுமுறை நேரத்தில் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து குமரிக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். கெடுபிடிகளால் அவர்கள் ஏமாற்றத்துக்கு உள்ளாவர்.

எனவே, விவேகானந்தர் பாறையில் பிரதமர் தியானம் மேற்கொள்ள வழங்கியிருக்கும் அனுமதியை, தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் வரை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒளிபரப்புக்கு தடை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

மக்களவைத் தேர்தல் பிரச்சாரம்முடிவுக்கு வந்த பிறகு நேரடியாகவோ, மறைமுகமாகவோ வாக்குகேட்கக் கூடாது என்ற விதியைஏய்த்து, சமூக ஊடகங்களிலும், செய்தி சேனல்களிலும் நேரலை செய்து, வாக்கு சேகரிப்பதே பிரதமரின் திட்டம். இதை தேர்தல் ஆணையம் அனுமதிக்கக் கூடாது. தியானத்தை தொலைக் காட்சிகளிலோ, சமூக ஊடகங்களிலோ நேரலை செய்ய அனுமதிக்கக் கூடாது.

இவ்வாறு மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE