முதுகெலும்பை முறிக்கிறதா தமிழகம்?

By காமதேனு

தமிழகத்தில் கடந்த ஓர் ஆண்டில் மட்டுமே 50 ஆயிரம் சிறு, குறு நிறுவனங்கள் காணாமல் போயிருக்கின்றன. 5 லட்சம் பேர் வேலை இழந்திருக்கிறார்கள்.

கடந்த வாரம் பிரதமர் மோடி,“இந்தியாவில் இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்குபவர்களாக மாறியுள்ளார்கள். ஸ்டார்ட் அப் தொழில்கள் பெரிய நகரங்களில் மட்டுமல்லாமல் சிறு நகரங்களிலும், கிராமங்களிலும்கூட துடிப்பாகச் செயல்பட்டு வருகின்றன” என்று பேசியிருந்தார். அதற்கு அடுத்த நாள் தமிழக சட்டமன்றத்தில், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அமைச்சகம் தமிழக அரசின் தொழில் துறை கொள்கை விளக்க குறிப்பேட்டைத் தாக்கல் செய்தது. ‘தமிழகத்தில் கடந்த ஓர் ஆண்டில் மட்டுமே, இந்தப் பிரிவின் கீழ்வரும் 50 ஆயிரம் நிறுவனங்கள் காணாமல் போயிருக்கின்றன’ என்கிறது அந்த அறிக்கை. இதுவரையில் தொழில் துறை, வளர்ச்சிப் பாதையில் இருப்பதாகவே தமிழக அரசு கூறிவந்த நிலையில் இந்த அறிக்கை தெரிவிக்கும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த நிதியாண்டில் தமிழகத்தில் 18.45 சதவீத சிறு, குறு நிறுவனங்கள் மூடப் பட்டுள்ளன. தமிழகத்தில் செயல்படும் மொத்த சிறு, குறு நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை 2016-17 நிதி ஆண்டில் 18,97,619 ஆக இருந்தது. இது, 2017-18-ல் 13,78,544 ஆகக் குறைந்துள்ளது. வேலையிழந்த இந்த ஐந்து லட்சம் பேரில் எத்தனை பேருக்கு வேறு வேலை கிடைத்தது, அவர்களது வாழ்வாதாரம் என்ன என்ற கேள்விகளுக்கு விடையில்லை.

இந்தச் சரிவுக்குக் காரணமாகப் பல விஷயங்களை முன்வைக்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். 2015-ல் சென்னையில் வந்த பெருவெள்ளத்திலிருந்தே ஆரம்பமாகி விட்டது சிறு, குறு தொழில்களின் சரிவு. அப்போது பல நிறுவனங்களின் இயந்திரங்கள், மூலப்பொருள்கள் தண்ணீரில் மூழ்கி வீணாகின. அந்த இழப்புகளைச் சரிசெய்யவோ, அவர்களின் தொழிலை மீட்டெடுக்கவோ அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், சென்னையில் உள்ள நிறுவனங்கள்தான் பாதிக்கப்பட்டன என்றால், அடுத்து மத்திய அரசு கொண்டுவந்த பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கைகளால் நாடு முழுவதிலும் உள்ள சிறு, குறு தொழில்கள் நசுக்கப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE