தமிழர்களுக்கு கர்நாடகத்திலிருந்து ஒரு ஆதரவுக் குரல்!

By காமதேனு

கர்நாடகாவில் வசிக்கும் குடவா இன மக்கள் தமிழர்களின் காவிரி உரிமைக்காகக் குரல் கொடுத்திருக்கிறார்கள்.

காவிரி நதிநீர்ப் பங்கீடு விவகாரத்தில் தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சித்துவருகிறது கர்நாடக அரசு. இந்த நிலையில், தமிழர்களின் காவிரி உரிமையைக் காக்க கர்நாடகத்திலிருந்து ஒரு குரல் எழும்பியுள்ளது. கர்நாடகத்தின் பூர்வகுடிகளான குடவா சமூகத்தினர், பூம்புகாரில் கூடி ‘காவிரியை மீட்போம் குடகை மீட்போம்’ என்று முழக்கமிட்டுள்ளனர்!

குடகு தேசியக்குழு - கர்நாடகத்தின் நச்சப்ப கொடவா தலைமையிலான இக்குழுவினர், கடந்த 24-ம் தேதி, குடகுமலையிலிருந்து பயணம் புறப்பட்டு காவிரி பாயும் பகுதிகள் வழியாக காரில் பயணித்து 30-ம் தேதி பூம்புகார் வந்து சேர்ந்தனர். இருபது பேர் கொண்ட அந்தக் குழுவினர் பூம்புகாரில் சிறப்பு வழிபாடு ஒன்றை நடத்தியதுடன் குடகையும், காவிரியையும் கர்நாடகத்திடமிருந்து மீட்க உறுதிமொழியும் ஏற்றார்கள்.

 “குடகு பகுதி 1956-க்கு முன்புவரை சி பிரிவு எனப்படும் தனி அதிகாரம் கொண்ட மாநிலப் பகுதியாக இருந்தது. பிறகு இது கர்நாடகத்தின் ஆளுகைக்குள் வந்ததும், பூர்வகுடிகளான குடவா இனத்தை ஒடுக்கும் முயற்சிகள் அதிகரித்தன. குடகின் பெரும்பாலான இடங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்ட்டுள்ளன. கன்னட மக்களில் சிலர் அப்பகுதியை ஆக்கிரமித்திருக்கிறார்கள். அவர்கள் அங்கு உற்பத்தியாகும் காவிரியில் எங்கள் குடவா இன மக்களுக்கு உள்ள உரிமையையும் மறுக்கிறார்கள்” என்கிறார் இந்த அமைப்பை வழிநடத்தும் நச்சப்ப கொடவா.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE